இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இந்திய உச்ச நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
ராம் சேது எனப்படுகின்ற ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமை சின்னமாக பிரகடனம் செய்யுமாறு கோரி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் என்.வி.ரமணா, உச்ச நீதிமன்ற நீதியரசர்களான A.S.போபன்னா , ஹிமா கோஹ்லி ஆகியோர் அங்கம் வகித்த நீதியரசர்கள் குழாமின் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மனு மீதான விசாரணை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால், அதனை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சுப்ரமணியம் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கமைய, இராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய மரபுரிமை சின்னமாக பிரகடனப்படுத்துமாறு கோரும், சுப்ரமணியம் சுவாமியின் மனுவை மார்ச் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளள மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று தீர்மானித்துள்ளது.
தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் தீவிற்கு இடையே உள்ள ஆழமற்ற திட்டு போன்ற பகுதியே இராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.
இராமர் பாலத்தின் 8 மணல் திட்டுக்கள் இலங்கைக்கு உரித்தானவை. அவை இலங்கை கடற்பரப்பில் அமைந்துள்ளன.
தலைமன்னாரிலுள்ள இராமர் பாலத்திற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் கடந்த வருடம் மார்ச் மாதமும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் கடந்த வருடம் பெப்ரவரி மாதமும் சென்று வழிபாடுகளை நடத்தியிருந்தனர்.
இதேவேளை, இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென் ஹொங் வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்யும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இராமர் பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி கண்காணித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த அவர், இந்த விஜயம் முடிவாக மாத்திரமன்றி ஆரம்பமாகவும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்று கடந்த வருடம் நவராத்திரி விழாவிற்காக இலங்கைக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்தபோது, சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் ராமர் பாலத்தின் புகைப்படத்துடன் கூடிய பதிவொன்றை இட்டிருந்தார்.
ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக பிரகடனப்படுத்துவதில் இந்திய பிரதமருக்கு உள்ள தடைகள் என்னவென அவர் அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் குறைந்தது அவரிடம் இது குறித்து வினவியேனும் தகவல் வரவில்லை.
அன்று அவர்கள் கடைப்பிடித்த மௌனத்தின் விளைவாக இன்று எமது நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையில் எமது நாட்டுக்குரிய மணல் திட்டுக்களும் இந்தியாவின் தேசிய மரபுரிமையாக அறிவிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.