பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
நேற்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் அவர் தன்னுரையில்,
இன்று எமது நாட்டின் பிரதான பிரச்னைகள், பொருளாதாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அதேபோன்று, அரசியல் துறையில் இரண்டு பிரதான பிரச்னைகள் காணப்படுகின்றன. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்துவது முதலாவது பிரச்னை.
அதற்கு தீர்வாக, கட்சித் தலைவர்கள் என்ற விதத்தில் நாம், 21வது திருத்தத்தைத் தயாரித்து வருகின்றோம். இரண்டாவது பிரச்னை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது. அதற்கான கால எல்லை மற்றும் நடைமுறைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். இதற்கு மேலதிகமாக பாராளுமன்றம் தொடர்பில் பிரச்னை ஒன்று உள்ளது.
20வது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றம் வலுவிழக்கச் செய்யப்பட்டு, அதிகளவிலான அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரம் தன்வசப்படுத்திக் கொண்டமையின் ஊடாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.
மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் வலுவிழந்துள்ளன. அவற்றை வலுவடைய செய்ய வேண்டுமாயின், அது குறித்து அறிக்கையிட புறம்பாக குழுவொன்று தேவைப்படுகின்றது. அதனால், வங்கி மற்றும் நிதி சேவைகள் தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எமது நிலையியற் கட்டளை 111ன் கீழ், எமக்கு கண்காணிப்பு குழுக்களை நியமிக்க முடியும். கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்படவில்லை.
அதனால், 10 கண்காணிப்பு குழுக்களை நியமிக்குமாறு நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன். இந்த கண்காணிப்பு குழுக்களுக்கு அரசாங்கத்தில் இருக்கின்ற விடயதானங்களை பகிர்ந்தளிக்க முடியும். அந்த கண்காணிப்பு குழுக்களின் ஊடாக அறிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியும். கொள்கைகள் தொடர்பிலும் நாடாளுமன்றத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பில் நாடாளுமன்றம் செயற்பட வேண்டும்.
இந்த நிதி செயற்குழுக்களிலும், கண்காணிப்பு குழுக்களிலும் தலைவராக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவார்கள். அமைச்சர்கள் இல்லை. அமைச்சர்களுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கான இயலுமை எமக்கு கிடைக்கும். இந்த இடத்தில் விசேட விடயமொன்று குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கின்றார்கள்.
பிரச்னைகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த 15 தெரிவுக்குழுக்களுக்கும் தலா 4 இளைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில் ஒருவர் இளையோர் பாராளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். மற்ற மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள். இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்க முடியும்.
அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகிறோம். இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்னைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட முடியும்” என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.