இலங்கை- இன்று வருகிறது 21 ஆவது திருத்தம்-விஜயதாச ராஜபக்ஷ தகவல்

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த சட்ட மூலம், அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, நீதித்துறை, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் இரட்டை குடியுரிமையை கொண்டவர்கள், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தவிர, தற்போதுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மேலதிகமாக தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்வனவு ஆணைக்குழு என்பன சுயாதீன ஆணைக்குழுக்களாக திருத்தப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை சுதந்திரமாக்கும் வகையிலும், பலப்படுத்தும் வகையிலும் 21ஆவது அரசமைப்புத் திருத்தம் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சபையினூடாகவே மத்திய வங்கியின் ஆளுநரை நியமிப்பதற்கும் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.