இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை விரைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இலங்கை தொடர்பில் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் முக்கிய பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.
சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் சிவில் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கை தவறியுள்ளமையானது, மனித உரிமைகள் நிலைவரம் மேலும் மோசமடைவதைக் காண்பிக்கும் அதேவேளை எதிர்காலத்தில் இத்தகைய மீறல்கள் அதிகரிக்கலாம் என்பதற்கான சமிக்ஞையாக அமைந்திருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகள் பேணப்படுவதையும் உறுதிசெய்யும் வகையிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முக்கியத்துவம் மிக்க 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதில் இலங்கை வெளிப்படுத்தியிருக்கும் மோசமான விளைவையும் இது மனித உரிமைகளின் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை உள்ளடக்கியிருக்கிறது. ஆகவே இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையில் பொறிமுறையொன்று நிறுவப்பட வேண்டியதன் அவசியம் இதனூடாக வெளிப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கான உள்ளகப்பொறிமுறை கடந்த ஒரு தசாப்தகாலமாகத் தோல்வியடைந்து வந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி ஐ.நாவின் 30/1 தீர்மானத்திலிருந்து விலகுவதாக இலங்கை அறிவித்திருப்பதுடன், அவற்றின் பரிந்துரைகளில் மிகவும் வரையறுக்கப்பட்ட விடயங்களே அமுல்படுத்தப்பட்டிருக்கிறது.
எனவே அரசாங்கத்தின் அனுசரணையுடனோ அல்லது அனுசரணையின்றியோ பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படும் என்ற மிகமுக்கிய செய்தியை ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கைக்குக் கூறவேண்டும்.
மேலும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்களைக் கண்காணித்தல், அறிக்கையிடல் மற்றும் எதிர்காலத்தில் வழக்குத்தொடுப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டுதல் உள்ளடங்கலாக மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளை ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமுல்படுத்த வேண்டும்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கை தொடர்பில் பிரித்தானியா, ஜேர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகள் ஏனைய உறுப்புநாடுகளுடன் இணைந்து புதிய தீர்மானமொன்றை முன்வைக்கவிருக்கும் நிலையில், தற்போது அனைவரது கவனமும் அதன் பக்கமே உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புநாடுகள் கடந்தகால அனுபவங்களிலிருந்து பாடங்கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன் உயர்மட்ட மனித உரிமை அதிகாரிகளினால் இனங்காணப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று மன்னிப்புச்சபையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.