இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நான். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கூட்டமைப்பிலிருந்து எந்த கட்சியையும் வெளியேற்றுவது பற்றி நாம் சிந்திக்கவேயில்லை. மாறாக, பங்காளிக்கட்சிகள் மேலும் கூட்டாக எவ்வாறு முடிவெடுத்து செயற்படுவது என்பது தொடர்பாகவே 3 கட்சிகிளின் தலைவர்களும் பேசி வருகிறோம் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் மகிழ்ச்சி என, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்ற நீண்ட விமர்சனங்கள் சுமந்திரன் மேல் உள்ள நிலையில், இந்த கருத்தும் வெளியாகியிருந்தது.
எனினும், அவரது கருத்தை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நிராகரித்திருக்கிறார்.
மாவை சேனாதிராசாவை தமிழபக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது,
கூட்டமைப்பிலிருந்து எந்த கட்சியும் வெளியேற வேண்டுமென நாம் எதிர்பார்க்கவில்லை. எந்த கட்சியையும் வெளியேற்ற நடவடிக்கையெடுக்கவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் ஒன்றுபட்டு தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென்றே நாம் கலந்துரையாடி வருகிறோம். இந்த விவகாரங்களை பகிரங்கமாக பேசி வீணாண சிக்கல்களை ஏற்படுத்த முனைபவர்கள் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நான்தான். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். எந்த ஒரு கட்சியையும் வெளியேற்றி, கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதை பற்றி நாம் சிந்திக்கவில்லை. பேசவும் இல்லை என்றார்.