இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, இலங்கைக்கு இந்தியா 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த வாரம் வெளிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணிக்கு ஆதரவாக 2 பில்லியன் டொலர்களும், கடனுதவியாக 1.5 பில்லியன் டொலர்களுமாக மேற்படி உதவியை இந்தியா வழங்கியுள்ளது.
மேலும் 3 பில்லியன் இலங்கை ரூபா மதிப்பிலான அரிசி, பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான நிவாரணப் பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியது. இவை இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 24ஆம் திகதி இந்தப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
தமிழக அரசினால் வழங்கப்படும் 40000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளடங்கிய பாரிய நிவாரணத்தின் இரண்டாம் கட்டமாக – குறித்த நிவாரணத்தொகுதி அமைந்திருந்ததாகவும் இந்திய தூதரகம் குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.