இலங்கைக்கு எந்த அரசியல் நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை-சீனா

இலங்கை சீனா ஒத்துழைப்பு எப்போதும் இலங்கை தலைமையிலான – இலங்கையின் கொள்கைகளையே பின்பற்றுகின்றது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உட்கட்டமைப்பிற்கு வெளிப்படைத்தன்மையற்ற கடனுதவியை வழங்கியமையே இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணி என அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமந்தா பவரின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஒத்துழைப்பு திட்டங்களும் முழுமையான விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி மற்றும் முழுமையான மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அவர் எந்த அரசியல் நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை – சீன ஒத்துழைப்பு இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்துள்ளது, இலங்கை மக்களுக்கு குறிப்பிடத்தக்க அனுகூலங்களை வழங்கியுள்ளது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் பல கூறுகளைக் கொண்டது எனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் கடன்களுக்கான சீனாவின் பங்களிப்பு சர்வதேச மூலதனச்சந்தை பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகளை காட்டிலும் குறைவானது எனவும் தெரிவித்துள்ளார்.