இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிநெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவுவதற்காக இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பிரான்ஸ் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிரான்கொய்ஸ் பக்டெட் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு உடனடி தீர்வை காண்பது இலங்கை உட்பட அனைவரினதும் நலனிற்கு உகந்த விடயம் என தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது வெளிநாட்டுக்கடனை திருப்பி செலுத்தாதன் காரணமாக பிரான்சிலிருந்து இலங்கைக்கான கடன்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை தனது நெருக்கடிகளிற்கு தீர்வை கண்டதும் கடன்களை வழங்குவது திருப்பி முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் முதல் பாரிஸ் கிளப் இலங்கை விவகாரத்தில் தீவிரமாக செயற்படுகின்றது இன்றும் இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரிஸ் கிளப் ஏனைய கடன் வழங்குநர்களுடன் விடயங்களை பரிமாறிக்கொள்கின்றது எனவும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடன்வழங்குவதை பத்து வருடங்களிற்கு ஒத்திவைக்கும் யோசனையை பாரிஸ் கிளப் முன்னெடுத்துள்ளது,இலங்கையின் கடன் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக 15 கடன் மறுசீரமைப்பு யோசனையை முன்வைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இடைக்காலத்தில் பிரான்ஸ் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிதொகைகளை வழங்கிவருகின்றது என தூதுவர் தெரிவித்துள்ளார்.
இவை சிறிய தொகை என்றாலும் இலங்கைக்கு முக்கிய உதவியாக உள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.