ஈஸ்டர் தாக்குதலை நடத்திய உண்மையான பயங்கரவாதிகளை காப்பாற்றவே அஸாத் மௌலானா முற்படுகிறார்- சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக சனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தாக்குதலில் ஈடுபட்ட மற்றும் திட்டமிட்ட அனைத்து தரப்புக்களையும் பாதுகாக்கவே அஸாத் மௌலானா இவ்வாறான தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் இன்று இதுதொடர்பாக உரையாற்றிய அவர், புகலிடம் கோரி வெளிநாட்டில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள அஸாத் மௌலானா, புகலிடக் கோரிக்கைக்காகவே இவ்வாறான பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

மேலும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் தேசிய மற்றும் சர்வதேச சக்திகள், மதகுருமார்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சஹ்ரானுக்கு நெறுக்கமான தரப்பினர் சிறையிலும், பிணையில் வெளியிலும் இருக்கும் நிலையில், இவர்கள் அனைவரையும் பாதுகாக்கவே அஸாத் மௌலானா முற்படுகிறார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில், நாடாளுமன்றில் இதுதொடர்பாக பேசும் அரசியல்வாதிகள், மீண்டும் அச்சமானதொரு சூழலை நாட்டில் ஏற்படுத்தவே முற்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், குறுகிய அரசியல் நோக்கத்திற்காகவே இவ்விடயம் சபையில் விவாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து தனது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை இல்லாது செய்யும் முயற்சியாகவே, தன்மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் அவர் சாடினார்.

அத்தோடு, சனல் 4 ஆவணப்படம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்படுமாக இருந்தால், அஸாத் மௌலானாவையும் விசாரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.