உள்ளகப் பொறிமுறை தமிழருக்கான நீதியையோ தீர்வையோ பெற்றுத் தராது!ரெலோ ஊடகப் பேச்சாளர்- குருசுவாமி சுரேந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளரும், சர்வதேச விடயங்களுக்கான பொறுப்பாளரும், தேசிய அமைப்பாளருமாகிய குருசுவாமி சுரேந்திரனுடன் ஒரு நேர்காணல்..

கேள்வி: கடந்த மனித உரிமை பேரவையில் நடந்து முடிந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய உங்களுடைய கருத்துக்கள்.

பதில்: நடந்து முடிந்த மனித உரிமை பேரவை கூட்டத்தொடரிலே இலங்கைக்கான பொறுப்புக் கூறலை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கு முகமாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணை இருபத்திரெண்டு நாடுகளினுடைய ஆதரவோடு வெற்றி பெற்றது. இது தமிழர்களுக்கான பரிகார நீதியை பெற்றுக் கொள்ளுவதற்கு உறுதியாக வழியமைக்கும் என்ற பாரிய நம்பிக்கை, எதிர்பார்ப்பு எம்மக்களிடம் இருந்தது. ஆனாலும் இப்பிரேரணை தன்னுடைய நோக்கத்தை அல்லது இலக்கை எட்ட தவறி உள்ளது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு, சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறை ஒன்றையும், சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றையும் கோரியே, தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள், சமய மத அமைப்புக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் சார்பிலே மனித உரிமைப் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகளுக்கும் மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கும் கோரிக்கையை முன்வைத்திருந்தோம். எங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மனித உரிமை உயர்ஸ்தானிகர் அவர்களுடைய அறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட இந்த மேற்கூறிய விடயங்களும், இந்த பிரேரணையில் உள்வாங்கப்படாமை மிகவும் கவலை அளிக்கிறது. ஆகவே, இது தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும் பரிகார நீதியை பெற்றுத்தரும் ஒரு பிரேரணையாக நாங்கள் பார்க்கவில்லை.

கேள்வி – தாங்கள் அங்கம் வைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தலைமை வகிக்கும் திரு சம்பந்தன் அவர்களும், பாராளு மன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களும், சர்வதேச விசாரணை ஒருமுறை பூடகமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பது எதன் அடிப்படையில்.?

பதில்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச விசாரணை பொறிமுறைக்கு செல்ல முடியாது. அதை மனித உரிமை பேரவையில் வலியுறுத்த முடியாது என்று பல தடவைகளில் அவர்கள் கூறி வந்த விடயம் தான் இது. ஐநா பாதுகாப்பு சபை இடமளிக்காது என்பது பிரதி வாதமாக இருந்தது. ஆனால் திடீரென்று இன்று அது பூடகமாக இருக்கிறது என்று சொல்வது எதன் அடிப்படையில் என்ற கேள்வி எழுகிறது. பிரேரணையில் புதிய ஆதாரங்களையும் சேகரிப்பதற்கான வசனங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதே போன்று இதில் அனுசரணை வழங்கிய நாடுகள் உள்ளடங்கலாக அவர்களுடைய அதிகார வரம்புகளுக்கமைய அந்த நாட்டிலே இருக்கக்கூடிய நீதிமன்றங்களின் முன்னால், குற்றவாளிகள் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியும். என்ற ஒரு பரிந்துரை, உள்வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது நாங்கள் கூறிய சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை ஒத்தது அல்ல. இதனால் பாரிய ஒரு பயனை அதாவது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் பரிகார நீதியை, பெற்றுக்கொள்வதற்கான அமைப்பாக இருக்க முடியாது என்பதுதான் எமது நிலைப்பாடு. நாம் மட்டுமல்ல பல அரசியல் தலைவர்கள், அவதானிகள், ஆய்வாளர்கள், நாடுகள், சர்வதேச சட்ட வல்லுனர்கள் மற்றும் ஐநா மனித உரிமைக்கான உயர் ஸ்தானிகர் உட்பட இதே கருத்தை வலுயுறுத்துவதை அவதானிக்க முடியும்.

கேள்வி: சர்வதேச குற்றவியல் விசாரணை சாத்தியமில்லை என்று சில தரப்புகள் கூறி வருகிறார்கள். அதற்கான இடைவெளியும் இல்லை. ஆகவே ஏதாவது ஒரு பொறிமுறையை நிறைவேற்றுவதுதான் சரி என்ற நிலைப்பாடு இருக்கிறது, உங்களுடைய கருத்து வித்தியாசமாக இருக்கின்றதே?

பதில்: சர்வதேச குற்றவியல் விசாரணை பொறிமுறை என்பது கோர முடியாது என்ற ஒரு கருத்தை சிலர் முன்வைத்தார்கள், பின்னர் மனித உரிமை பேரவையிலே அது முடியாது என்று கூறினார்கள். இப்போது பூடகமாக உள்ளது, அல்லது அரசு நீதிவழங்காவிடின் சர்வதேச விசாரணையை கோருவோம் என்ற நிலைப்பாடை முன்வைக்கிறார்கள். இப்படி பல்வேறு பட்ட கருத்தை, காலத்திற்கு காலம் முன்வைத்து கொண்டிருக்கிறார்கள். உண்மையிலே இந்த மனித உரிமை பேரபவயிலே பொறுப்புக் கூறல் விடயம் ஐக்கிய நாடுகள் சபையினுடைய செயலாளர் நாயகம் அவர்கள் மனித உரிமை உயர்ஸ்தானிகரிடம் வழங்கிய பணிபுரையால் தான் அல்லது கோரிக்கையின் அடிப்படையில்தான் இந்த பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கின்றன.

பொறுப்புக் கூறலையோ நீதிப் பொறிமுறையையோ வலியுறுத்தாத பிரேரணைகளை தொடர்ந்தும் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றுவதன் மூலம் எங்களுக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியாது. இம்முறை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கைப்படி ஐநா செயலாளர் நாயகத்திடம் நீதி மற்றும் விசாரணைப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த கையளிப்பதே எமக்கான கதவுகளை திறக்க வழிகோலும்.

கேள்வி: சர்வதேச நாடுகள் தங்களுடைய பூகோள அரசியல் நலன் சார்ந்த விடயங்களை கொண்டுதான் இதை நோக்குகிறார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது, அப்படியாயின் எப்படி தமிழ் மக்களுக்கான நீதி பொறிமுறையை அதையும் தாண்டி பெற்று கொள்ள முடியும் எனக் கருதுகிறீர்கள்?

பதில் : மனித உரிமைப் பேரவையில் இருக்கக்கூடிய நாடுகள், தங்களுடைய பூகோள அரசியல் நலன் சார்ந்த விடயங்களையும், தமிழ் மக்களுக்கு, பரிகார நீதியைப் பெற்றுத் தருகிறோம் என்ற போர்வையில், முன்னெடுப்பது, தெள்ளத் தெளிவாக, அவதானிக்கக் கூடியதாகவேதான் இருக்கிறது. சர்வதேச, நாடுகளுடைய பூகோள நலன்களை தாண்டி இதை ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளிப்பதன் மூலம் இந்த பூகோள அரசியல் நலன்களை தாண்டி நாங்கள் நீதிப் பொறிமுறையை உருவாக்க முடியும், எம் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். ஆகவே மனித உரிமை பேரவையில் இருக்கும் வரைக்கும், இது பூகோள நலன் சார்ந்த விடயங்களை தான் முன்னெடுக்கும் என்பதில், மாற்று கருத்து இல்லை.

கேள்வி : இந்தியா, இதில் நடுநிலைமை வகித்திருப்பது எந்த நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது? தமிழ் மக்களுக்கு சாதகமான நிலைப்பாடுதான் என கருதலாமா?

பதில்: இந்தியா, எங்களுடைய அண்டை நாடு என்ற வகையிலும், தமிழ் மக்களின் நலன் சார்ந்த நாடு என்ற வகையிலும், எங்கள் மீது அக்கறை கொண்ட நாடு என்ற வகையிலும், எங்களுக்கான அரசியல் தீர்வு, சமாதானம், சமத்துவம், நீதி என்பவற்றில் அக்கறை கொண்டுள்ளதாகவும், இந்திய பிரதமருடைய வருகையிலும், இந்திய வெளிநாட்டு அமைச்சருடைய வருகையிலும், வெளிநாட்டு செயலாளருடைய வருகையிலும், இந்தியாவில் பல்வேறு தளங்களிலும், அவர்கள் அதை தெரிவித்து வந்திருக்கிறார்கள். ஆகவே, தமிழ் மக்கள் மனித உரிமை பேரவையிலே கொண்டுவரப்பட்ட பிரேரணையால் எங்களுக்கு நீதி ஒருவகையிலும் கிட்டாதென்று தெரிந்திருந்தாலும் கூட இந்தியா எங்களுடைய ஆதரவு சக்தியாக இருக்கும் என்று இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் உணர்த்த பெரிய நம்பிக்கையோடு நாங்கள் காத்திருந்தோம். ஆகவே, இந்த நடுநிலைமை போக்கானது, தமிழ் மக்களை பொறுத்தளவிலே, பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நடுநிலைமைப்போக்கு எங்களுக்கு ஒரு சாதகமானதாக நாங்கள் கருத முடியாது. ஆனால் இந்தியாவின் ஆதரவு எம்மக்கள் விடயத்தில் அவசியமானது.

கேள்வி: ஆனால், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, ஒரு அரசியல் தீர்வு, தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் அல்லது மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, இந்தியாவின் வலியுறுத்தலால்தான், இதில் உள்வாங்கப்பட்டு இருக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆகவே, இந்தியா அக்கறை கொண்டுள்ளது தானே?

பதில்:அப்படியாயின் ஏன் பிரேரணை சார்பாக வாக்களிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் என்பது, முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர், இலங்கையினுடைய அரசியல் யாப்பிலே உள்வாங்கப்பட்ட ஒரு மாகாண சபை அதிகாரப் பரவலாக்கல் முறையாகும். இதை முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்துவதற்கு, இந்தியாவினுடைய நேரடித் தலையீடு அல்லது நேரடி அழுத்தங்களே, இலங்கை அரசாங்கத்தை, அதை நிறைவேற்றுவதற்கு, சாதகமாக அமையும். ஆகவே, அந்த அரசியல் விடயத்தை, இந்தியா கையாள முடியாது என கொண்டு போய், நீதி பொறிமுறை, அல்லது பொறுப்பு கூறலுக்கு உருவாக்கப்பட்ட பிரேரணைக்குள்ளே, பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்த கோரி உள்வாங்கச் சொல்லி இருப்பது, நேரடியாக இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி அதை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமையில் இந்தியா இருக்கிறதா என்று எங்களை சிந்திக்க தூண்டுகிறது.

கேள்வி: அப்படி என்றால் இந்த பிரேரணையால் எந்தவித நன்மையும் இல்லை என்று கருதுகிறீர்களா?

பதில்: அப்படி நான் சொல்லவில்லை. இந்த பிரேரணை வந்து பல சிறப்பான அம்சங்களை உள்வாங்கி இருக்கிறது, குறிப்பாக இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கைக்கான பொறுப்பு கூறல் அல்லது குற்றவியல் விசாரணை என்பதை இலங்கையினுடைய அரசின் கரங்களில் இருந்து நகர்த்தி, இலங்கைக்கு வெளியிலே இந்த பிரேரணை கொண்டு செல்ல வைத்திருக்கிறது. ஆனால், அது எங்களுடைய பரிகார நீதியை பெற்றுத்தரக்கூடிய அதிகாரம் மிக்கதாக, அல்லது வலு உள்ளதாக இல்லை என்பதுதான் எங்களுடைய மனக்குறை. உதாரணமாக, இந்த குற்றவியல் விசாரணை பொறிமுறை என்பது, ஐ.நா செயலாளர் நாயகத்தினுடைய நேரடி கண்காணிப்பின் கீழ், அவருடைய பணிப்புரையின் கீழ், அவருடைய கட்டுப்பாட்டின்கீழ் வருகின்ற பொழுதுதான், அது ஒரு வலுவானதாக, பலம் மிக்கதாக அமையும். மனித உரிமைப் பேரவையினால் சட்ட ரீதியான நெருக்கடிகளை உருவாக்கவோ அல்லது நீதிப் பொறிமுறையையோ இப்போது நிறைவேற்றிய பிரேரணை மூலம் பெற்று கொடுக்க முடியாது. இலங்கை அரசை நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை இணை அனுசரணை வழங்கி, நடைமுறைப்படுத்த தூண்டுகிற அல்லது கட்டுப்படுத்த வல்ல சரத்துக்கள் எதுவும் இப்பிரேரணையில் இல்லை.

கேள்வி: எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் நகர்வு எப்படி இருக்க வேண்டும், உங்களுடைய கருத்தை கூற முடியுமா?

பதில்: உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்த பொழுது உரிமையைப் பெற்றுக் கொள்ளுகின்ற பிரச்சனை மாத்திரம் அதாவது அதிகார பரவலாக்கள் மூலம் எங்களுக்கான ஒரு சுயாட்சி அலகு முறைய பெற்றுக் கொள்வதற்கான தேவையே எங்கள் மக்களிடம் இருந்தது. ஆனால் இன்று, அது பல பரிமாணங்களை எட்டிய, ஒரு விரிவடைந்த அரசியல் போராட்டமாக காணப்படுகிறது. உள்ளகத்திலேயே தீர்த்துக் கொள்ளக்கூடிய இந்த விடயம், இன்று சர்வதேச நாடுகளுடைய தலையீடு உட்பட பல கோணங்களை நோக்கி, எங்களுடைய அரசியல் நகர்வு அமைந்திருக்கிறது.

முதலாவதாக, எங்களுடைய மக்களினுடைய நீதியை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குற்றங்களுக்கான, பரிகார நீதியைப் பெற்றுக் கொள்ளுகின்ற முயற்சி, இரண்டாவதாக, எங்களுடைய நீண்ட கால கோரிக்கையான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டியது . மூன்றாவதாக எங்களுடைய இனப் பரம்பலை செழுமைப் படுத்த எங்களுடைய மக்களை பொருளாதார ரீதியாக கட்டி வளர்த்தெடுக்க வேண்டிய நகர்வினையும் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே எங்கள் மக்களுக்கான நீதி, அரசியல் தீர்வு, பொருளாதார கட்டமைப்பு என்ற மூன்று விடயங்களை, இன்று தமிழ் தேசிய அரசியல், முகம் கொடுத்து நிற்கின்றது.

ஆகவே, மிகவும் காத்திரமான முறையிலே, மிக திட்டமிட்ட வகையிலே, சர்வதேச நாடுகளின் உதவியின் அடிப்படையிலேயும், அவர்களுடைய ஆதரவோடும்தான், இந்த விடயத்தை நாங்கள், வெற்றிகரமாக முன்னெடுத்து, எங்களுடைய இனம் முகம் கொடுத்து கொண்டிருக்கின்ற, மூன்று பிரச்சனைகளுக்கும், முடிவு காண எதிர்காலத்தில் நாங்கள், எதிர்கொள்ள வேண்டிய, அரசியல் நகர்வு.

கேள்வி: இன்று பதவியில் இருக்கும் அரசாங்கம், உள்ளகப் பொறிமுறை ஊடாக, தாங்கள் இந்த விடயங்களை முன்னெடுப்பதாக, கூறியிருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.

பதில்: இன்று இந்த அரசு நல்லிணக்கம் பொறுப்பு கூறல் அல்லது அரசியல் தீர்வு, அபிவிருத்தி என்ற பல விடயங்களை தாங்கள் உள்ளகப் பொறி முறைய முலம் முன்னெடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அரசை அரியணையில் ஏற்றிய உடனே சிங்கள பௌத்த பெரும்பான்மை நலன்களைத்தான் முன்னெடுப்போம் என்று அவர்கள் உறுதி பூண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறார்கள். அரசில் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக, அதை நீர்த்துப் போகின்ற செயல் திட்டங்களே முன்னெடுக்கப்பட்டிருக்கிறன.

உதாரணமாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ராணுவ வீரர்களை அல்லது பாதுகாப்பு படையினரை ஜனாதிபதியினுடைய சிறப்பு ஆணையின் கீழ் விடுதலை செய்து நல்லிணக்கத்திற்கான அல்லது பொறுப்பு கூறலுக்கு தாங்கள் தயார் இல்லை என்பதை தெரிவித்திருக்கிறார்கள்.

அதே போன்று தொல்லியலின் ஊடாக எங்களுடைய கலாச்சார மையங்கள், நிலம், காணி அபகரிப்பு என்ற விடயங்களை, வேறு வடிவத்தில், மாற்று வடிவத்தில் முன்னெடுப்பதை, நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. அதே போன்று, பொருளாதார கட்டமைப்பை, வளர்த்தெடுப்பதற்கான , சர்வதேச முதலீட்டாளர்களையோ அல்லது வேறு வடிவத்திலோ, முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய சூழ்நிலை இன்று அருகி வருகின்றதை காணுகிறோம். தமிழ் மக்களுடைய பிரச்சனை ஒருபுறமிருக்க, முஸ்லிம் மக்களுடைய பிரச்சனைக்கு உக்கிரமடைந்து இப்பொழுது சிங்கள கிறிஸ்தவர்களுடைய பிரச்சனையும் விசுவரூபம் எடுத்துள்ளது. அவர்களும் சர்வதேச நீதியை கோரும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைமையிலே இந்த நாட்டிலே பல்வேறுபட்ட இனங்கள், மதங்களுக்கு இடையிலான ஒரு பிரச்சனைய அரசு வளர்த்து இருக்கிறது என்றே கூற வேண்டும். இந்த சூழ்நிலையிலே உள்ளகப் பொறிமுறை என்பது ஒருபோதும் வெற்றி தரக்கூடியதாக அமையாது.

Samugammedia.com