எமது தாயகத்தில் முப்படைகள் குவிக்கப்பட்டு ,அவர்களுக்கான நிதி எதற்காக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது

எதற்காக எமது தாயகத்தில் முப்படைகள் குவிக்கப்பட்டு ,அவர்களுக்கான நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் 28/2/2025 வெள்ளிக்கிழமை இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

இன்றைக்கு பாதுகாப்பு சம்மந்தமான விவாதத்திலே பல விடையங்களை எடுத்துச்சொல்லாம் என நினைக்கிறேன்.
உண்மையிலேயே ஒவ்வொரு அரசாங்கமும் வருகின்றபோது இந்த முப்படைகளுக்கும் கூடுதலான நிதியை ஒதுக்குவது வழமையானதொன்றாகிவிட்டது. இப்பொழுது இருக்கின்ற புதிய அரசாங்கம் கூட இந்த இராணுவத்திற்கும், முப்படைகளுக்கும் கூடுதலான நிதியை ஒதுக்கியிருக்கிறார்கள் என்றால் அது தேசியப்பாதுகாப்பு சம்மந்தமான விடையங்களை கையாளுவதற்காக ஒதுக்கப்பட்டதா? என்ற கேள்வியை நான் கேட்கவிரும்புகிறேன்.

உண்மையிலே போர் காலங்களிலே இராணூவங்கள் வடக்கு, கிழக்கிலே இந்த முப்படைகளும் குவிக்கப்பட்டார்கள். ஆனால் இந்த முப்படைகளும் இந்த போர் இல்லாத சூழலிலே, துப்பாக்கி சத்தங்கள் இல்லை, இன்றைக்கு இந்த முப்படைகளும் என்ன செய்கிறார்கள் எனறால் எங்களுடைய பொது மக்களுடைய காணிகளை அபகரித்து நான் நினைக்கின்றேன் உலக நாடுகளிலே எங்கேயும் இல்லாத ஒரு விடயத்தை அவர்கள் பொது மக்களுடைய காணிகளில் விவசாயம் செய்கிறார்கள். பொது மக்களுடைய கால்நடைகளில் பால் கறக்கிறார்கள். அதன் பொருட்களை வெளியிலே விற்கிறார்கள்., இங்கே A 9 பாதையால் போகின்றபோது அல்லது வடக்கு கிழக்கிலே எங்கு போனாலும் இராணுவத்தினுடைய உணவு அந்த Canteen இல்லாத இடங்கள் இல்லை என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

எங்களுடைய தேசத்திலே, எங்களுடைய பிரதேசத்திலே ஏன் இராணுவம் , முப்படைகளும் குவிக்கப்பட்டிருக்கிறது. ஏன் அந்த இராணூவமும் முப்படைகளும் எங்களுடைய காணிகளை ,பொது மக்களுடைய காணிகளை, பிடித்திருக்கிறார்கள் என்ற கேள்வியை இந்த அரசாங்கம் கேட்க வேண்டும். ஜனாதிபதி அவர்கள் சொன்னார்கள் இந்த இராணுவம் பிடித்திருக்கிற காணிகளை, பொது மக்களுடைய காணிகளை விடுதலை செய்வதாக சொன்னார்கள். ஆனால் இற்றவரைக்கும் அது நடைபெறவில்லை.

மக்கள் இன்றைக்கு உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தமட்டிலே இந்த வரவு செலவு திட்டத்திற்கு நான் ஆதரித்து வாக்களித்ததன் நோக்கம் என்னவென்றால் எங்களுடைய வன்னி மாவட்டத்திலே இன்றைக்கும் வடுக்களை மனதில் சுமந்து திரிகின்ற எங்களுடைய மக்களுடைய வாழ்வாதாரத்தை, எங்களுடைய மக்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற அந்த குடும்பங்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வகையிலே நிதி ஒதுக்கப்பட்டுள்ள அந்த அடிப்படையிலேதான் வாக்களித்தேன்.

ஆனால் என்னைப்பொறுத்தமட்டிலே பாதுகாப்பு விடயத்திலே என்னுடைய வாக்கு எதிராகத்தான் இருக்கும் என்று சொல்லிக்கொள்ள விருமகபுகின்றேன். இன்றைக்கு எத்தனை காணிகளை இந்த முப்படைகளும் அபகரித்திருக்கிறார்கள். வன்னியிலே வவுனியாவை எடுத்துக்கொண்டால் ஈச்சங்குளம் இராணுவ முகாம் அது பொதுமக்களுடைய காணி. தேயடி கூழாங்குளம் இராணுவ முகாம் அது பொதுமக்களுடைய காணி.வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்ஸசகர் இருக்கின்ற காணி உட்பட சுமார் 200 ஏக்கர் காணியை A9 வீதியிலே பிடித்துள்ளார்கள் அதுவும் பொதுமக்களுடைய காணி.

அதைவிட தலைவர் அவர்களே மன்னாரை எடுத்துக்கொண்டு பார்த்தீர்கள் என்றால் தேவாலயங்கள், கோவில்கள் இவை அனைத்தும் இராணுவத்தினதும்,முப்படைகளினதும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பொது மக்கள் வழிபடுவதற்காக நேரங்களை ஒதுக்கி அவர்கள், பரிசோதனை செய்யப்பட்டுத்தான் வழிபட அனுப்பப்படுகிறார்கள். உதாரணமாக நான் சொல்வது மன்னார் பியர் கிராமத்தில் இருக்கிற ஒரு தேவாலயம் அது கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மக்கள் வழிபடுவதற்கு அந்த திருவிழா காலங்களில் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

முள்ளிக்குளம் அது ஏற்கனவே விவசாய நிலங்கள் உட்பட அது விடுவிக்கப்பட்டதாக நிலங்களாக சொல்லப்பட்டாலும் அது இன்றைக்கும் விடுவிக்கப்படவில்லை. அது கடற்படையின் கண்காணிப்பிலே இருக்கிறது. இப்படி மன்னாரிலே சன்னார் கிராமம் போன்ற இடங்களிலே பல ஏக்கர் கணக்கிலே இராணுவம் பயிற்சி முகாம் என்று பிடித்திருக்கிறார்கள். இவை அனைத்தம் பொதுமக்களுடைய காணிகள்.

முல்லைத்தீவை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட படையினரும், பொலிசாரும் பிடித்திருக்கிற காணியின் அளவு 1494 ஏக்கர் நிலப்பரப்பை அபகரித்திருக்கிறார்கள். ஆகவே ஜனாதிபதி அவர்கள் தேர்தல் காலத்திலும் அதன் பின்பும் இந்த இராணுவம்,முப்படைளும் பிடித்திருக்கிற காணிகளை விடுவிப்பதாக சொன்னதை நடைமறைப்படுத்த வேண்டும் என்பதை நான் இந்த சபையிலே கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

ஏன் வடக்கிலே கூடுதலான முப்படைகளும், இராணுவமும் போடப்பட்டிருக்கிறார்கள். எனக்கு முன் பேசிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரவிகரன் அவர்கள் சொன்னது போல இந்த குவிக்கப்பட்ட இராணுவம், இந்த குவிக்கப்பட்ட முப்படைகளும் இருந்துகொண்டு போதைவஸ்துக்கான வழிகளை, அந்த எங்களுடைய வடக்கிலே திறந்திருக்கப்படாடிருக்கிறது என்றால் அது என்ன காரணம்? என்று நான் கேட்டுக்கொள்ள விரூம்புகிறேன்.

ஆகவே இவர்களும் உடந்தையா?என்ற கேள்வியை நான் எழுப்பிக்கொள்ள விரும்புகிறேன். இந்த விடயத்திலே அரசாங்கம் இந்த சரியான ஒரு கவனத்தை எடுக்கவேண்டும். கடல் மார்க்கமாக கடற்படை இருக்கிறது. இராணுவம் பல ஏக்கர்களை பிடித்திருக்கிறார்கள். பரிசோதனை சாவடிகள், முகாங்கள் இருக்கின்றது. எப்படி இந்த மாற்றத்திற்கான நிலை உண்டுபண்ணப்பட்டிருக்கிறது. இந்த போதைவஸ்துகள் எப்படி கடத்தப்படுகின்றன? கடற்படை அதில் கவனத்தை செலுத்தவில்லையா? ஆகவே இந்த முப்படைகளும் வடக்கிலே கூடுதலாக ஏன் அவர்கள் காணிகளை பிடித்து கூடுதலாக அங்கே முகாமிட்டிருப்பது இந்தியாவிற்கு எதிராக இலங்கை போர் தொடுக்கும் என்ற அச்சமா? அல்லது மீள் உருவாக்கம் என்று செல்லுகின்ற வகையிலே உங்களுடைய சிந்தனையிலே இருக்கின்ற அந்த மீள் உருவாக்கம் என்பது என்னைப்பொறுத்த மட்டிலே அந்த விடயங்களில் எங்களுடைய மக்கள் நிதானமாக இருக்கிறார்கள்.

ஆகவே அதை வைத்துக்கொண்டு இந்த முப்படைகளையும் நீங்கள் குவித்திருப்பது தவறு என்று நான் செல்லுகின்றேன். இங்கே பார்த்தோம் என்றால் தென்னிலங்கையிலே பல துப்பாக்கி சூடுகள் நடக்கின்றது. ஆகவே அவர்களை நீங்கள் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு நான் முழுமையாக இராணுவத்தையோ முப்படைகளையோ எடுக்கவேண்டும் என்று சொல்ல வரவில்லை .ஆனால் தென்னிலங்கையிலே பல பிரட்சனைகள் நடக்கின்றது. அங்கே இருக்கின்ற படைகளை குறையுங்கள்.உங்களால் முடியவில்லை என்றால் இந்த போதைவஸ்துகளை தடுக்க முடியவில்லை என்றால் ஏன் அங்கே குவிக்கப்பட்ட இராணுவம் இருக்கிறது.பயங்கரவாத தடைச்சட்டத்திலே நீங்கள் செய்வது என்னவென்றால் அப்பாவி பத்திரிகையாளர்களை கைது செய்வதும், விடுதலை போராட்டத்திலே படங்களை கைபேசிகளிலும், கணணிகளிலும் வைத்திருக்கும் போது அவர்களை கைதுசெய்கிறீர்கள்.

ஆனால் இன்றைக்கு துப்பாக்கி பிரயோகம் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே இந்த தேசிய பாதுகாப்பு என்பது அப்பாவி தமிழ் மக்களையும், போராட்ட வீரர்களை தங்களுடைய மனங்களில் சுமந்திருக்கிற அதை தங்களுடைய கைகளில் வைத்திருக்கிறவர்களிடம் தான் உங்களுக்கு எதிரியாக தெரிகிறார்களா?. இதற்காகத்தான் நீங்கள் வடக்கிலே கூடுதலான முப்படைகளையும் போட்டிருக்கிறீர்களா?இதற்காகத்தான் கூடுதலான நிதியை நீங்கள் ஒதுக்கியிருக்கிறீர்களா? என்ற கேள்வியை நான் கேட்கின்றேன்.

எங்களுடைய மக்கள் அச்சப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு உங்களை நம்பி வாக்களித்திருக்கிற்ர்கள். வடக்கிலே கூடுதலான வாக்குகள் NPPக்கு அளிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களும் சில நேரங்களில் தவறாக அந்த உணர்வுகளை மறந்து பேசுகின்ற வாய்ப்பை இந்த அரசாங்கத்திற்கு பயத்திலேயோ தெரியவில்லை. ஆனால் எங்களை பொறுத்த மட்டிலே இந்த இராணுவத்தினுடைய, முப்படைகளுடைய அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது நிதி குறைக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய நிதி குறைக்கப்படும்போதுதான் உண்மையான ஒரு நல்லிணக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். இந்த பாதுகாப்பு என்ற போர்வையிலே எங்களுடைய பத்திரிகையாளர்கள், இளைஞர்களை கைதுசெய்வது மட்டும் தேசிய பாதுகாப்பாக இருக்காது என்பதை இந்த சந்தர்ப்பத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.