எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இராணுவத்தினரை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன இன்று தெரிவித்திருந்தார்.
அதற்கமைய ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இரு இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியிருந்தார்.
இந்நிலையில் நாட்டில் இராணுவமயமாக்கல் என்பது பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான இந்த அரசாங்கத்தின் உத்தி என அம்பிகா சற்குணநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“போருக்குப் பிந்தைய இராணுவமயமாக்கல், குறிப்பாக 1வது ராஜபக்ச ஆட்சியின் போது வடக்கு மற்றும் கிழக்கில் அதிகரித்தது. யஹபாலன அரசாங்கத்தின் போது 2019 நவம்பருக்குப் பின்னர் இராணுவமயமாக்கல் தீவிரப்படுத்தப்படவில்லை.
தற்போது, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் மூலம் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் வர்த்தமானியை வெளியிட்டு வருகிறார்.
கடைசியாக 21 மார்ச் 2022 இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சிறைச்சாலைகள் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு, தடுப்புக்காவல் & புனர்வாழ்வு ஆகியவற்றின் இராணுவமயமாக்கலையும் நாங்கள் கண்டுள்ளோம், இவை அனைத்தும் உரிமை மீறல்களில் விளைந்துள்ளன.” என அவர் கூறியுள்ளார்.