ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் பொறுப்புக் கூறல் கருத்திட்டம் ஸ்தாபிப்பு

மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக 46 கீழ் ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியுள்ளதுடன் அறிக்கையிட வேண்டிய காலக்கெடுவையும் வழங்கியது.

48 ஆவது அமர்வில் வாய்மொழி மூல அறிக்கையையும் 49ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையையும் 51 ஆவது அமர்வில் பொறுப்புக்கூறலை மேலும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த சாத்தியப்பாடுகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறும் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

அத்தோடு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் உட்பட இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிடுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகதிற்கு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை விடுத்தது.

மேலும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் 2.8 மில்லியன் டொலர் நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு இணங்க, இலங்கை தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு என ஜெனிவாவை தளமாக கொண்ட ஒரு புதிய விசேட இலங்கைப் பொறுப்புக்கூறல் கருத்திட்டத்தை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது.