ஐ.நா காலநிலை மாற்ற மாநாடு ஆரம்பமானது

உலகளாவிய ரீதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற உச்சி மாநாடு ஸ்கொட்லாந்து நகரமான கிளாஸ்கோவில் ஆரம்பமாகியுள்ளது. சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

2030 ஆம் ஆண்டிற்குள் காபன் வெளியேற்றத்தை எவ்வாறு குறைப்பது மற்றும் பூமியின் நிலைபேறுகைக்கு எவ்வாறு உதவுவது என்பது தொடர்பான அறிவிப்பை அவர்கள் வெளியிடவுள்ளனர்.

மனிதர்களால் ஏற்படும் சுவட்டு எரிபொருள் பாவனையால் வெளியிடப்படும் காபன் காரணமாக உலகம் வெப்பமடைந்து வருவதால், காலநிலை பேரழிவைத் தவிர்க்க அவசர நடவடிக்கை தேவை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த மாநாடானது, “உலகின் உண்மையின் தருணம்” என்று பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். இந்த தருணத்தை நாம் கைப்பற்றுகிறோமா அல்லது அதை நழுவ விடுகிறோமா என்பதை அனைவரும் தமக்கு தாமே கேள்வியாக கேட்க வேண்டும் என மாநாட்டிற்கு முன்னர் பொறிஸ் ஜோன்சன் வலியுறுத்தியிருந்தார்.

உலகளாவிய வளிமண்டலவியல் ஸ்தாபனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையானது, மாநாட்டின் முதல் நாளில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டுகளுடன் தற்போதுள்ள வெப்பநிலையை ஒப்பீடு செய்து, காலநிலை தொடர்பான விஞ்ஞானிகள் உலகளாவிய வளிமண்டலவியல் ஸ்தாபனத்தின் அறிக்கையை தயாரித்துள்ளனர்.

வெப்ப அலைகள், வெள்ளம் மற்றும் காட்டுத் தீ உட்பட காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தீவிர வானிலை நிகழ்வுகள் தீவிரமடைந்து வருகின்றன.

முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த தசாப்தம் மிகவும் வெப்பமானதாக இருந்ததுடன், அதனை சமாளிக்க உடனடியான கூட்டு நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரசாங்கங்கள் இணக்கியிருந்த நிலையில், ஐ.நா காலநிலை மாற்ற மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ளது.