ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் António Guterres-இற்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நியூயோர்க்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஐ.நா பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை நேரப்படி நேற்று இரவு 10.00 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றினார்.
நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதி செய்து, நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கி நாட்டை இட்டுச்செல்வதே தமது நோக்கம் என இதன்போது அவர் தெரிவித்தார்.
இந்த இலக்கை அடைவதற்கான நம்பிக்கையும் ஆதரவும் இலங்கை மக்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வௌியிட்டார்.
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில், பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக அண்மைக்காலங்களில் மிகவும் சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டு வந்த நிலையில், மக்களின் வாழ்க்கையில் பேரழிவுகரமான தாக்கமும் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிகளால் ஜனநாயக மரபுகள் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் ஆழமாக வேரூன்றிய, உறுதியான ஜனநாயக மரபுகளினால் ஜனநாயக அரசியல் அதிகார மாற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஐ.நா.வின் 80 ஆவது ஆண்டு நிறைவை நோக்கி, 2024 ஆண்டில் எதிர்கால உச்சி மாநாட்டிற்குத் தயாராகும் போது, பிளவுபட்ட அரசியல் புவிசார் கருத்தியலொன்றை காண்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய பூகோள அதிகார மையமொன்று தோன்றி வருவதையும் காணக்கூடியதாக உள்ளதென தெரிவித்தார்.
இந்த மாற்றத்துடன், ஒருபுறம் மக்கள் வறுமையிலிருந்து சுபீட்சத்தை நோக்கிச்செல்வதோடு அபிவிருத்தி, மானிட முன்னேற்றம் குறித்த பெரும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மறுபுறம், தரைமார்க்கமாகவும் சமுத்திர ரீதியாகவும் தோன்றியுள்ள பாரிய சக்திகளின் போட்டிகளும் புவிசார் அரசியல் பதற்றங்களும் வெளிப்படையான போர் சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை போன்ற உலகளாவிய தெற்கின் நடுநிலையான, அணிசேரா நாடுகள் புதிய உலகளாவிய செல்வந்த நாடுகளின் முன்னிலையில் மீண்டும் வரையறைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
2040 இல் நிலக்கரிப் பயன்பாட்டை படிப்படியாகக் குறைத்து, 2050 இல் கார்பன் நிகர பூஜ்ஜியத்தை அடைய எதிர்பார்த்துள்ளதாக ஐ.நா கூட்டத்தொடர் உரையின் போது அவர் தெரிவித்தார்.
தற்போதைய உலகளாவிய பன்முகத்தன்மை மற்றும் தீர்மானமெடுக்கும் பிரதிநிதிகளாக பாதுகாப்பு சபையின் கட்டமைப்பு விரிவாக்கப்பட வேண்டுமெனவும் இதற்கு இணையாக, ஐ.நா பொதுச்சபையின் வகிபாகம் பலமாக இருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களை ஒழிப்பதை ஆதரிக்கும் இலங்கையின் நீண்டகால நிலைப்பாட்டிற்கு இணங்க, இந்த ஆண்டு இலங்கை விரிவான சோதனை தடை ஒப்பந்தத்தை அங்கீகரித்துள்ளதாகவும் இதற்கமைய, அண்மையில் அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தை இலங்கை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும் சந்திப்பில் ஈடுபட்டார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றிய அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வழங்கிய இரவு விருந்துபசாரத்தின் போதே இந்த சந்திப்பு இடம்பெற்றது.