ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை எனவும், அதன் பொருளாதாரக் கொள்கையை மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுவே தற்போது கையாள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையை பிரகடனப்படுத்தி 2020ஆம் ஆண்டு சிறிகொத்தவைக் கைப்பற்றுவதற்கு தயாரான ஜக்கிய மக்கள் சக்தி, இன்று மொட்டுக் கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு அடிபணிந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
2022 ஜூலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன், நாட்டின் கட்சி அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தான் எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
”பொருளாதார நெருக்கடி காரணமாக ஜூலை 2022 இல் ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், நாட்டின் கட்சி முறைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. இன்று அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. இந்த நிலையைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.
கடந்த இரண்டு வருடங்களாக எமது பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டங்களை சிலர் தமது பாராளுமன்ற பதவிக் காலத்தில் மேற்கொள்ளவில்லை. நாட்டில் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்து, அதுவரை இருந்த கொடுப்பனவை மூன்று மடங்காக உயர்த்த பாடுபட்டோம். மேலும், 20 இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இவை நாட்டின் பொருளாதாரம் ஒழுங்காக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்காத வேலைத்திட்டங்கள் என்றே கூற வேண்டும்.
இந்த வேலைத் திட்டங்களை தொடர பாராளுமன்றத்தின் பெரும்பான்மையானவர்கள் எனக்கு ஆதரவளித்துள்ளனர். பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இதில் அடங்கும். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளனர். இந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும்.
பொதுஜன பெரமுனவில் இருந்தாலும் சரி, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தாலும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும் சரி, வேறு கட்சியாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
கடந்த காலத்தில் அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டன. மொட்டுக் கட்சியில் இருந்து சிலர் எதிர்க்கட்சிக்கு சென்றனர். இப்போது அந்தக் குழு ஐக்கிய மக்கள் சக்தியை வழிநடத்துகிறது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தாங்கள் சிறிகொத்தாவைக் கைப்பற்ற வேண்டும் என்று 2020 இல் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படும் குழு தற்போது மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாத்தவன் நான். ஜே.ஆர் ஜயவர்தன, ஆர், பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, இவர்கள் அனைவருடனும் நாங்கள் பணியாற்றினோம்.
இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்று தங்களை அழைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த உரிமையும் இல்லை. இன்று எமக்கு பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நாட்டு நலனுக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டும். இன்று அரசியல் போக்கு மாறிவிட்டது.
நீங்கள் அனைவரும் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். 20 இலட்சம் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களில் 10 இலட்சம் இதுவரை தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அந்தப் பத்திரங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியும். எனவே இந்த கண்டி மாவட்டத்தில் உள்ள நீங்கள் அனைவரும் நல்ல ஒருங்கிணைப்புடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (07) கலந்துகொண்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கிராமங்களை ஒன்றிணைத்து முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் அங்கத்துவத்துடன் ஆலோசனை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தார்.
இதன்படி கிராமங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நேரடியாக அறிவிக்கும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் “அஸ்வெசும” வேலைத்திட்டம் மற்றும் “உறுமய” காணி உறுதி வேலைத்திட்டத்தில் நேரடியாக பங்குபற்றுமாறு முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்த ஜனாதிபதி, தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்க வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்னோடிகளாக உள்ளூராட்சி பிரதேசங்களில் உள்ள இளைஞர்களை முன்னோக்கி கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.