புதியகூட்டுக்கள், புதியபெயர்களோடு வருவது தமிழ்தேசியத்திற்கு அவசியமில்லை என்று தமிழீழ விடுதலை இயக்கம் கருத்துவதாக ரெலோ பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது(28-02-2021).
இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….
ஐநா மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அதற்கு அனைத்து அங்கத்துவநாடுகளின் ஆதரவினையும் குறிப்பாக இந்தியாவின் ஆதரவினையும் நாங்கள் கோரிநிற்கிறோம்.
தமிழ்மக்களின் நீண்டகால அபிலாசைகளை தீர்க்ககூடிய அதனை நிறைவுசெய்யக்கூடிய அரசியல்யாப்பு ஒன்று தயாரிக்கப்படவேண்டும். அதன் மூலம் இந்த நாட்டில் இருக்கின்ற அரசியல் பிரச்சனை தீர்விற்கு வரவேண்டும். இந்தஅரசு அதனை கருத்தில் எடுக்கவேண்டும்.
அத்துடன் 13ஆம் திருத்தசட்டத்தை முற்றுமுழுதாக அமுல்படுத்தி அதனை அடிப்படையாக வைத்து ஒரு மாகாணசபை தேர்தலை மிகவிரைவாக நடாத்தி அரசியல் தீர்விற்கான ஒரு ஆரம்ப கட்டநடவடிக்கையை இந்த முன்னெடுக்கவேண்டும்என்று அரசிடம்நாம் கோருகிறோம்.
தமிழ்கட்சிகளின் கூட்டுதொடர்பில் ஒரு உறுதியான முடிவினை எடுத்துள்ளோம். 2001ஆம் ஆண்டில் ஆயுதரிதீயாக பலப்பட்ட ஒரு இனமாக இருந்தநேரத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்ந்தும் பலமான ஒரு அமைப்பாக இயங்கிவந்திருக்கின்றது.
அதிலிருந்து கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற கட்சிகளைசேர்ந்தவர்கள் தான் புதிய கூட்டினை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கின்றார்கள்.
எனவே கூட்டமைப்பு இப்போது இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் அதற்குள்ளே அனைவரும் மீண்டும்வந்து இணையவேண்டும்.
புதியகூட்டுக்கள், புதியபெயர்களோடு வருவது தமிழ்தேசியத்திற்கு அவசியமில்லை என்று எமது கட்சி கருத்துகின்றது.
தமிழ் கட்சிகள் எல்லோரும் ஒருமித்த கொள்கையின் கீழ் செயற்படக் கூடிய வடிவமைப்பைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்ள வேண்டும். அதைச் செய்வதற்கான முழு முயற்சியையும் நாம் செய்யத் தயாராக இருக்கின்றோம்.
ஏனைய கட்சிகள் இணைகின்ற போது தனிப்பட்ட கட்சிகள் தமக்கு அதிகாரங்கள் கூட்டுகின்ற செயற்பாட்டை மேற்கொள்ளமுடியாது. தேர்தலில் தோற்றவர்களைச் சேர்க்கக் கூடாது என நாம் யோசிக்கவில்லை.
அது மக்களின் விருப்பம். ஒற்றுமையைக் கொண்டு வர வேண்டும். அதனைத் தான் மக்கள் விரும்புகிறார்கள். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி எமது ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் கிடைத்த வெற்றி.
இதில் தோற்றவர்கள்,வென்றவர்கள் என்று அல்லாமல் எமது மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.அதற்கான கடமை எமக்கு இருக்கிறது. மக்களது விடுதலைக்காக அவர்களது உரிமைக்காகக் குரல் கொடுக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு தோற்றவர்கள் என்று புறந்தள்ள முடியாது.
தமிழ்தேசிய பேரவை என்பதற்குமப்பால் தமிழ்மக்களிற்கான ஒரு ஐக்கியம் அவசியமாகின்றது. அதனை கருதியே கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அங்கு ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் தான் இந்த கட்சிகள் பிரிந்துநின்று தனித்து செயற்ப்பட்டனர்.அதேகட்சிகளை வைத்துக்கொண்டு புதிய ஒரு கூட்டை ஆரம்பிப்பதை விட கருத்து வேறுபாடுகளிற்கு காரணமான விடயங்களை சீர்செய்து கூட்டமைப்பானது மீள கட்டியமைக்கப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டு அனைத்து கட்சிகளையும் உள்வாங்கிக்கொண்டு பயணிப்பதையே மக்கள் எதிர்பார்கின்றனர்.
அதுவே எமது மக்களின் எதிர்காலத்திற்கும் அரசியலுக்கும் பலம் சேர்க்கும் என்று எமது கட்சி கருதுகின்றது.
அனைவரும் ஒருமித்த கொள்கையின் கீழ் செயற்படக்கூடிய வடிவமைப்பை கூட்டமைப்பு கொள்ளவேண்டும். அதனை செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். மக்களின் விருப்பமாகவே அதனை பார்கிறோம். என்றார்.
எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பில் உள்ள அனைத்து அங்கத்துவ கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்த பின்னரே அறிவிக்கும். அதுவே இறுதி முடிவாகவும் இருக்கும். ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குள்ளே இருக்கக்கூடிய அபிப்பிராயங்களை தெரிவிக்கலாம்.
கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது….நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் சம்மந்தன் ஐயாவை தலைவராக நான் தெரிவுசெய்தேன். அடுத்ததாக பேச்சாளர் தெரிவு வந்தபொழுது சுமந்திரன் பதிவி விலகுவதாகவும் சிறிதரன் பெயரை முன்மொழிவதாகவும் அவர் பரிந்துரைத்தார். அதற்கு பின்னர் கட்சி தலைவர்களினால் ஏற்கனவே எடுக்க பட்ட முடிவின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் என்னுடைய பெயரை முன்மொழிந்ததால் சர்ச்சை ஒன்று உருவானது.இன்றுவரைக்கும் அதற்கு தீர்வை எட்டுகின்ற வாய்ப்பு கிட்டவில்லை. எந்த ஒரு கட்சியும் எல்லாவற்றையும் ஆளுமை செய்கின்ற வகையில் கூட்டமைப்பு இருக்ககூடாது. இப்படியான சிறிய விடயங்கள் பகிர்ந்தழிக்கப்படவேண்டும் என்பதை பிரதானமானவிடயமாக பார்கவேண்டும். ஜனநாயகம் என்பது அந்த மரபுகளிற்கு உட்பட்டதாகதான் இருக்கவேண்டும்.
இதனை விரைவில் தீர்ப்பதற்கு சம்பந்தன் ஐயாவிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். ஆகவே அடுத்த நாடாளுமன்ற குழுக்கூட்டத்திலே இந்தவிடயத்தை ஆராய இருக்கிறோம். கூட்டமைப்பை மக்கள் ஆதரிக்கின்றார்கள் என்று கூறிக்கொண்டு எந்த ஒரு கட்சியும் அதிகாரத்தை செலுத்தும் நிலைப்பாட்டில் இருக்கக்கூடாது.
மக்களது விருப்பம் முக்கியம். பிரிந்து சென்றவர்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் இணைய வேண்டும் எனத் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுகிறது. ஜனநாயக முறையில் எல்லோரது கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும் என்பது தான் எல்லா கட்சிகளினதும் விருப்பமாகவுள்ளது.
மக்களது ஆணையை மீண்டும் கூடுதலாக பெறவேண்டுமாக இருந்தால் எல்லா கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையும்போது, அவை சமனாக நடத்தப்பட வேண்டும். எல்லா கட்சிகளும் மக்களுக்காகச் செயற்படுவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் உளத்தூய்மையுடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இணைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.