இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் பிரச்சினைக்குரியதாகவே உள்ளதாக தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் அரசாங்கம் இதற்கு தீர்வை காண்பதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது.
நீதிமறுஆய்வு இல்லாததாலும் அரசியல் நோக்கங்களிற்காக அதனை பயன்படுத்தலாம் என்பதாலும் பயங்கரவாத தடைச்சட்டம் பிரச்சினைக்குரியதாக காணப்படுகின்றது என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஸ் சைபி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் தங்களிற்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பல அரசியல்வாதிகள்தெரிவித்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்பது குறித்து இலங்கையின் பரந்துபட்ட மக்கள் மத்தியில் கருத்துடன்பாடு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2017 இல் அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப மாற்றுவதாக உறுதியளித்தது கடந்த வருடம் அரசாங்கம் முன்மொழிந்த மாற்றங்களை நாங்கள் வரவேற்றோம் ஆனால் அது போதுமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என முன்னைய அரசாங்கம் தீர்மானித்த போதிலும் அது தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலான தேசிய பாதுகாப்பு சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும் எனவும் அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்.