ஒன்றுக்கும் உதவாத தீர்மானத்தை நிராகரிக்கிறோம்’: மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தை மீள நிராகரித்தது இலங்கை!

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான 51/1 தீர்மானத்தை இலங்கை மீண்டும் நிராகரித்துள்ளது. ஆனால் சபையுடன் கலந்துரையாடுவதற்கு இலங்கை திறந்தே இருக்கும் என்று கூறியுள்ளது.

“மனித உரிமைகள் பேரவையால் பல பயனற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சமீபத்திய 51/1 தீர்மானமும் அதிலொன்று. சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் நமது சம்மதம் இல்லாமல் அது நிறைவேற்றப்பட்டதாக கடந்த ஒக்டோபர் மாதம் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார். இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன். 46/1 தீர்மானத்தின் அதன் சொந்த விளக்கத்திற்கு இணங்க OHCHR ஆல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மீதான வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை விரிவுபடுத்தும் மற்றும் வலுப்படுத்தும் இந்த தீர்மானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம், ” என்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணாதிலக, அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது வழமையான அமர்வில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த தீர்மானங்கள் எனது நாட்டு மக்களுக்கு உதவாது. இலங்கை சமூகத்தை பிளவுபடுத்தும். இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்கு உதவாது.

“நாட்டின் குறிப்பிட்ட தீர்மானங்களுக்கு எங்கள் எதிர்ப்பு இருந்தபோதிலும், இந்த கவுன்சிலுக்கு முன்னர் விளக்கப்பட்டபடி, கவுன்சில், சிறப்பு நடைமுறைகள் மற்றும் ஒப்பந்த அமைப்புகளுடன் விவாதிக்க நாங்கள் திறந்திருக்கிறோம்“ என தெரிவித்தார்.