ஒரு நாடு ஒரு சட்டம் தமிழ் தேசியத்திற்கு சொல்வது என்ன? – ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

ஒரு நாடு ஒரு சட்டம் தமிழ் தேசியத்திற்கு சொல்வது என்ன ? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் வேறு சட்டவாக்க அலகுகள் நாட்டுக்குள் இருக்க முடியாது என்பதே அது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணி தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரவந அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணிக்கு ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படை நோக்கம் ஒரு நாட்டுக்குள்ளே ஒரு சட்டவாக்க முறைமை மாத்திரமே இருக்க முடியும். வேறு சட்டவாக்க அதிகாரங்கள் கொண்ட அலகுகள் இருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவது. இதன் விளைவாக தமிழ் தேசிய கட்சிகள் தமிழ் மக்களுக்கு கூறி வருகின்ற சுயாட்சி, தன்னாட்சி, கூட்டாட்சி, கூட்டு சுயாட்சி, ஒரு நாடு இரு தேசம் அல்லது மாகாண சபைகள் எவையும் இருக்க முடியாது என்ற செய்தியை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் தமிழ் தேசியம் பேசும் சில கட்சிகள் அரசு முன்வைக்க இருக்கும் புதிய அரசியல் யாப்பில் அரசியல் தீர்வு கிடைத்துவிடும் என்று தமிழ் மக்களுக்கு எதிர்வு கூறுகிறார்கள். இதை தடுப்பதற்கான அல்லது குறைந்தபட்சம் எதிர்ப்பதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்.

அரசியல் தீர்வுக்கான பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்து விட்டாயிற்று. அரசோ மரியாதைக்கு தன்னும் அழைத்து பேசுவதாக இல்லை. பல கடிதங்கள், கோரிக்கைகள் அனுப்பியும் அரசாங்கம் செவி கொடுக்கவில்லை. மாறாக புலம்பெயர் அமைப்புகளோடு பேச்சுக்கு தயார் என்று அறிவித்திருக்கிறது.

சர்வதேச ஆதரவு மூலம் அல்லது பூகோள நகர்வுகளின் மூலம் அரசியல் தீர்வு வந்து தமிழ் மக்கள் மடியில் விழுந்துவிடும் என்று கனவில் மிதப்பதாக இருக்கிறது. பூகோள அரசியல் நகர்வுகளை மேற்கொள்வதாகவும் இல்லை.
எந்த சர்வதேச நகர்வுகளும் இந்தியாவை தாண்டி இலங்கையில் நடைபெற முடியாது என்பது பட்டறிந்த யதார்த்தம். எல்லா சர்வதேச நாடுகளும் தமிழ் தரப்பை அழைத்து மதிப்பளித்து எமது பிரச்சனைகளை செவிமடுத்தாலும் இறுதியில் இந்தியாவையே கருத்து கேட்பார்கள்.

இந்தியா தமிழர் தரப்பின் அரசியல் தீர்வு விடயங்கள் சார்பாக இலங்கை அரசை வலியுறுத்துவதாக இருந்தால் 13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக மாத்திரமே தலையீடு செய்ய முடியும் என கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உறுதியாக தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் வருகை தந்த வெளி விவகார அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் அதைத் தெளிவுபட கூறிவிட்டார்கள்.

இந்த நிலையில் இலங்கை அரசு மிகத் தந்திரமாக தன்னுடைய காய்களை நகர்த்தி வருகிறது. மாகாணசபை தேர்தல்களை நடத்துவதாக அறிவித்துள்ளது. அதிகாரங்கள் பறிக்கப்பட்ட நிலையில் எலும்பு கூடாக இருக்கும் மாகாணசபை தேர்தலை வெற்றி கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய அரசியல் தரப்புக்கள் முனைப்பு காட்டுகிறார்களே தவிர அதில் காத்திரமான அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கான எந்த நடைமுறையையும் செயல்படுத்தவில்லை.

இதேநேரம் அரசு ஒரே நாடு ஒரே சட்டம் கொள்கை வகுப்பு என்பது நாட்டில் வேறு எங்கும் சட்டவாக்க அதிகாரம் உள்ள அலகுகள் நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இருக்க கூடாது என்று உறுதி பூண்டுள்ளது. இதனடிப்படையில் சிங்களப் பேரினவாதம் தவிர்ந்த மற்ற இனங்கள் எல்லாம் இந்த நாட்டுக்கு சொந்தமானவர்கள் அல்ல, பௌத்த பேரினவாதம் சொல்வதைக் கேட்டு அடங்கி வாழ வேண்டும் என்ற கொள்கையோடு செயற்படுகின்ற ஞானசார தேரரை இந்த குழுவிற்கு தலைமையாக நியமித்திருக்கிறது. புதிய அரசியல் சாசனத்தை ஜனவரி 2022 இற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு தயாராகி உள்ளது. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு இந்த சாசனம் நிறைவேற்றப்படும். அதேநேரம் பொதுசன வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைகள் வரும் வேளையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற பிரச்சாரத்தை சிங்கள மக்களிடம் வைத்து இனவாதத்தைக் கக்கி வாக்கெடுப்பை வெற்றிகொள்ள அரசு முயற்சி செய்கிறது. அதில் வெற்றியும் அடையும்.

அந்த நிலையில் தமிழர் தரப்பால் முன்வைத்த அரசியல் தீர்வை உள்வாங்க வைப்பதற்கு சர்வதேச அழுத்தம் அவசியம். புதிய அரசியல் யாப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்போது 13வது திருத்தச் சட்டமும் இந்திய இலங்கை ஒப்பந்தமும் ஒட்டுமொத்தமாக காலாவதியாகிவிடும். அதற்குப்பின் இந்தியா இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாத சூழ்நிலை ஏற்படும். தமிழினமும் புதிய தேர்தல் முறை, திட்டமிட்ட காணி அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் அரசியல் பலத்தை இழக்க நேரிடும். இந்த அபாய கட்டத்தில் இன்று நாங்கள் உள்ளதை புரிந்து கொள்ளாத பலர் தாங்கள் கொள்கைவாதிகள் என மக்கள் முன்பு நின்று வீராப்பு பேசுவதை அறிக்கைகள் மூலம் காணக்கிடைக்கிறது.

அரசின் தமிழினத்திற்கு எதிரான பெளத்த பேரினவாத புதிய அரசியல் யாப்பு, திட்டமிட்ட காணி அபகரிப்பு, சிங்கள குடியேற்றத்தின் மூலம் இனக் குடிப் பரம்பலை சிதைப்பது, புதிய தேர்தல் முறைமையின் ஊடாக பிரதிநிதித்துவத்தை குறைப்பது, எல்லை மீள் நிர்ணயத்தின் மூலம் எல்லைகளை மாற்றுவது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தினை நடைமுறைப்படுத்தி எதிர்கால அரசியல் கோரிக்கைகளை ஒட்டு மொத்தமாக தடுத்து நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. இதை தடுத்து நிறுத்த இந்தியாவின் ஆதரவை கோரும் எமது அரசியல் நகர்வினை விமர்சிக்க முற்படுபவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அரசின் நிகழ்ச்சி நிரலை அங்கீகரிப்பதாக அமையும்.

இதை விடுத்து அரசியல் பலமும் ஒற்றுமையும் இல்லாத சூழ்நிலையில் எமது இனத்திற்கு சர்வதேச ஆதரவு தான் ஒரே வழியாக உள்ளது. ஒற்றை ஆட்சிக்கு உட்படாத கூட்டாட்சி முறையான அரசியல் தீர்வே எமது நிலைப்பாடு. அது சாத்தியமாகும் வரையில் தமிழரின் நிலை என்ன என்பதை சிந்திக்க வேண்டும். இந்தியாவின் ஆதரவை கோருவதன் மூலமே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற திட்டத்தின் கீழ் தமிழினம் ஒட்டுமொத்த அரசியல் உரிமையையும் இழப்பதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முடியும்.

ஆகவே தமிழர் தரப்பு வீணான கொள்கை வீராப்புக்களை முன்வைத்து கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களைத் தவற விட்டது போல இப்பொழுது எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலையில், இருப்பதையும் இழந்து விடாது இருக்க ஒன்றுபட்டு ஒருமித்த நிலையில் 13ஐ நடைமுறைப்படுத்த இந்தியாவை கோருவதன் மூலம் தான் அரசின் போக்கை கட்டுப்படுத்தவும் எதிர்கால அரசியல் தீர்வை எட்டவும் வழிவகுக்கும். மேலும் தமிழர் தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டில் இந்தியாவை 13 இன் அடிப்படையில் கோருவதன் மூலம் இந்தியாவின் தமிழ் மக்கள் சார்பான நிலைப்பாட்டையும் பங்களிப்பை உறுதிப்படுத்தும் சந்தர்ப்பமாக அமையும்.