நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் வசிக்கும் ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவை 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பொதுமக்களின் கைகளிலுள்ள வெளிநாட்டு நாணயத்தை முறைசார் வங்கி முறைமைக்குள் கொண்டுவரும் நோக்கில் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச்சட்டத்தின் 8 ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள கட்டளைக்கு அமைவாக இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் வசிக்கும் ஒருவர் தன்வசம் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் அளவு 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்படவுள்ளது. அதுமாத்திரமன்றி ஏனைய வெளிநாட்டு நாணயங்களும் இதற்குச் சமனான அளவில் குறைக்கப்படவுள்ளது.
அதேவேளை மேற்குறிப்பிட்ட தொiகையை விடவும் அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை கைகளில் வைத்திருப்பவர்கள் கடந்த 16 ஆம் திகதியிலிருந்து 14 வேலைநாட்களுக்குள் தம்வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை தனிநபர் வெளிநாட்டு நாணயக்கணக்கில் அல்லது வர்த்தக வெளிநாட்டு நாணயக்கணக்கில் வைப்பிலிடவேண்டும். இல்லாவிட்டால் உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி போன்ற அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தகருக்கு விற்பனை செய்யவேண்டும்.
மேற்குறிப்பட்ட காலப்பகுதியின் பின்னர் எவரேனும் 10,000 டொலர்களுக்கு மேற்பட்ட வெளிநாட்டு நாணயத்தைத் தம்வசம் வைத்திருந்தால் வெளிநாட்டு நாணயச்சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்த மேலதிக தகவல்களை ஏதேனுமொரு உரிமம்பெற்ற வர்த்தக வங்கி மூலமோ, தேசிய சேமிப்பு வங்கி மூலமோ அறிந்துகொள்ளமுடியும். இல்லாவிட்டால் வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.dfe.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 011-2477255/011-2398511 ஆகிய இலக்கங்களின் மூலம் வெளிநாட்டுச்செலாவணித்திணைக்களத்தைத் தொடர்புகொள்வதன் ஊடாகவோ அறிந்துகொள்ளமுடியும்.