யாழ்ப்பாணம் கந்தரோடையில் தமிழ் பௌத்த எச்சங்களின் மீது, தற்போது அமைக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த விகாரைப் பகுதிக்கு அண்மையாக முன்னெடுக்கப்பட்ட தொல்பொருள் அகழ்வின் போது லட்சுமி நாணயங்கள் 5 மீட்கப்பட்டுள்ளன. அவற்றுடன் ரோமன் நாணயங்களும் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான ஆராய்ச்சி இணைப்பாளர், இலங்கையின் புதிய கூட்டத்திட்ட இணைப்பாளர் கலாநிதி அரெய்ன் டி சாக்சே, கலாநிதி நிமால் பெரேரா, இலங்கை தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் உதவி பணிப்பாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து இந்த அகழ்வுப் பணியை ஒரு மாதமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையிலே கி.பி 1ஆம் நூற்றாண்டுக்கும் 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படும் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் ஐந்தும், ரோம நாணயங்கள் சிலவும் கடந்த வாரம் மீட்கப்பட்டுள்ளன.
வடக்கில் தமிழ் பௌத்தம் நிலவிய காலப்பகுதியில் கந்தரோடையிலும் விகாரை அமைக்கப்பட்டு, தமிழர்கள் வழிபட்டிருந்தனர். இருந்தாலும், தற்போது பிக்குகளின் செல்வாக்கின் கீழான தொல்லியல் திணைக்களம், கந்தரோடையில் விகாரையே இருந்தது என கூறிவந்த நிலையில் அந்தப் பகுதியில் இருந்து இந்து தெய்வத்தின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன.
1917 ஆம் ஆண்டு கந்தரோடையில் கள ஆய்வு மேற்கொண்ட போல் பிரிஸ் இவ்வகை நாணயங்களை கண்டுபிடித்து அதில் உள்ள பெண் உருவம் தாமரை மலரில் நிற்பது போல் பொறிக்கப்பட்டுள்ளதை ஆதாரமாக காட்டி அதற்கு லட்சுமி நாணயம் என முதல் முதலாக பெயரிட்டு இருந்தார். அவரால் இடப்பட்ட பெயரே இன்று வரை பயன்படுத்தப்படுகிறது. யாழ்ப்பாண கோட்டையின் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்விலும் இவ்வகை நாணயங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.