குட்டி ஜனாதிபதிகளாக மாகாணங்களை ஆட்சி செய்யும் ஆளுநர்கள் -ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எந்தெந்த அதிகாரங்கள் 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு.

ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோதாக மாகாணசபையை நடாத்துவதென்பது அது முடியாத காரியம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்த பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முகமாக இன்று(10) மாலை பெரியகல்லாறுக்கு விஜயம் செய்து அங்குள்ள விளையாட்டுக் கழகங்களுடன் கலந்துரையாடி விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபைத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. வடக்கு கிழக்கிலே இருந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்குத் தான் மாகாணசபை முறைமை வந்தது. இந்த மாகாணசபை முறைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்திற்கு, உடன்பட்டு இந்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

அதுவும் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தை, தமிழ் மக்களுக்கு இருந்த இனப்பிரச்சினைக்கு, ஒரு தீர்வைக் காண்பதற்காக இந்திய அரசினால், இலங்கை அரசு அப்போதிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின், கையை முறுக்கித்தான் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்பது பலருக்குத் தெரியுமோ தெரியாது.

அந்த நேரத்தில் களத்திலே நின்ற எனக்குத் தெரியும். அந்த வகையில் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டு மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. 1990 ஆம் ஆண்டு காலங்களிலே, பிரதேச செயலகங்கள்கூட மாகாண சபைக்குப்பட்டிருந்தது. பிரேமதாஸவின் காலத்தில் பிரதேச செயலகங்கள் விடுவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

காணி அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன, அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை. 2015 இற்கு முன்பு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் திவிநெகும எனும் சட்டத்தின்கீழ் உள்ளூர் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கின்றன.

மாகாணசபையை நடாத்த வேண்டிய தேவை இந்த அரசிற்கு இருக்கின்றது. அந்த அளவிற்குக் குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் நாங்கள் வேண்டிக் கொள்வது மாகாணசபை உருவாக்கப்பட்டபோது, எந்த எந்த அதிகாரங்கள் 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு.

ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோது ஆக மாகாணசபையை நடாத்துவதென்பது அது முடியாத காரியம். எனவே 2009இலே போராட்டம் முடிவுக்கு வரும்போது, அப்போதைய ஜனாதிபதி இந்தியாவிடமும், சர்வதேசத்திடமும் 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் போதாது, 13 பிளஸ், பிளஸ் நான் கொடுப்பேன் எனக் கூறியிருந்தார்.

தற்போது அந்த 13 பிளஸ், பிளஸாக இல்லாமல் 13, மைனஸாக இருக்கின்றது. தமிழ் மக்கள்கூட 13வது திருத்தச் சட்டத்தை ஒரு நிரந்தரத் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் இந்த மாகாண சபை முறைமையை இனப்பிரச்சினைக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக ஏற்றுக் கொள்வோம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றிருந்தோம்.

அந்த வகையில் மாகாணசபைக்கு அது உருவாகும் போது உள்ளடக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும், உள்ளடக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் மிக விரைவாக நடக்கவேண்டும். இல்லையேல் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவுள்ள ஆளுநர்கள் குட்டி ஜனாதிபதிகளாக மாகாணத்தை ஆண்டு கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மாகாணத்தின் வளங்களை அழிப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மாகாணத்தையே கூறுபோட்டு விற்று விடுவார்கள்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இன விகிதாச்சார அடிப்படையில் தமிழர் மாத்திரமல்ல எந்த ஒரு இனத்தவரும், தனித்து நின்று அந்த இனம் சார்ந்து முதலமைச்சரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைதான் இருக்கின்றது.

மாகாணசபைத் தேர்தல் வரும்போது, அதற்குரிய வியூகங்களை அமைத்து ஒரு தமிழ் நபர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

2015 ஆம் ஆண்டிலே இந்த நாட்டிலே நல்லாட்சி என்று சொல்லப்பட்டது, ஆனால் அது நல்லாட்சி அல்ல. அவர்களின் ஆட்சி மாற்றத்தினூடாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெருமனதுடன் கிழக்கில் ஒரு முஸ்லிம் நபரை முதலமைச்சராக்கியது.

அந்த வகையில் நாங்கள் புதிதாக வியூகங்களை அமைத்து, பேசக்கூடியவர்களுடன் பேசி தமிழ் மக்கன் ஒருவரைக் கிழக்கில் முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மை. அது வெளியுலகிற்குத் தெரிந்து கொண்டிருக்கின்றது. அந்த ஒற்றுமையீனம் நீங்க வேண்டும் என்பது தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) எண்ணப்பாடு.

அதன்பிரகாரம் நாங்கள் சில ஒற்றுமை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கள் தற்போது 3 கட்சிகள்தான் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழ் தேசிய பரப்பிலே இருக்கின்ற கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி நாங்கள் ஒரு கூட்டாக 2001 ஆண்டு எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருந்ததோ, அவ்வாறு பலமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பது எமது எண்ணம்.

இந்நிலையில் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்படாமலேயே இவர்தான், அல்லது அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் எனக் கூறுவது, பக்குவமடைந்த அரசியல்வாதிகள் கூறும் கருத்தல்ல. கூட்டமைப்புக்கென்று தர்மம் உள்ளது. அதற்கு ஒரு ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. அந்த ஒருங்கிணைப்புக்குழு கூடி கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதைத் தெரிவிக்கும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.