கூட்டணி சார்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதை அரவிந்தன் நிறுத்திக் கொள்ள வேண்டும் : ஆனந்தசங்கரி

தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதை அரவிந்தன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஸ்ட உபதலைவர் என்று தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைகள் விடுவதை அரவிந்தன் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவரை எமது கட்சி சிரேஸ்ட உப தலைவராக தெரிவு செய்யவில்லை என்பதை ஊடகங்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆயுட்கால உறுப்பினர் பட்டியல் இன்று இல்லை. இரு தடவை கட்சி பிளவுபட்டு ஆயுட்கால உறுப்பினர் பட்டியல் காலவதியாகிவிட்டது.

இவ்வாறு கூறித்திரிவது கூட அரவிந்தனின் தந்திரங்களில் ஒன்றாகும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலைமைகளை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியாக எமது மக்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று அரவிந்தன் சொல்லும் அளவிற்கு அரசியல் தெரியாதவனல்ல.

அரவிந்தன் பிறப்பதற்கு 15 வருடங்களுக்கு முன்பாகவே அரசியலுக்கு வந்தவன். மிகச்சிறந்த அரசியல் தலைவர்களுடன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தவன். கிளிநொச்சி தொகுதியில் என் கால் படாத இடமே கிடையாது. என்னுடைய அரசியல் பின்னணியும் வரலாறும் தெரியாமல் கருத்துக் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

2018ம் ஆண்டு வரை லண்டனில் இருந்து விட்டு எமது மக்களின் அவலநிலை தெரியாமல் அரசியல் பேசுகின்றார். தற்போதுள்ள அரசியல் யதார்த்தநிலையை நன்கு புரிந்து கொண்டுதான் நான் சமீபத்தில் “அந்நிய நாடுகளை தலையிட கோருவது மேலும் ஆபத்தை விளைவிக்கும்” என்று ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தேன். அதனை விளங்கிக் கொள்ளாத அவர் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அறிக்கை விடுவதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய காலம் தொட்டு, தந்தை செல்வாவுடன் இணைந்து அவர் மறையும் வரை தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து, அவர் மறைந்த பின்பும் அவரின் வழியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை தமிழ் மக்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் ஜனநாயக ரீதியில் போராடிக்கொண்டு வருகின்றேன்.

எங்கிருந்தோ வந்து விட்டு தற்போது தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பது நகைப்பைத் தருகின்றது. பாவம் அவரது அரசியல் அறிவு அவ்வளவுதான்.

இல்லாத ஒரு பதவியை தனக்கு தரப்பட்டது என்று பொய்களைக் கூறி எமது கட்சி உறுப்பினர்களை குழப்பத்தில் ஆழ்த்தி கட்சிக்குள் உட்பூசலை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன்.

இது அவரின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.