வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்கான பொறுப்பை ஏற்று சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், சிறைக்கைதிகளுக்கு அச்சுறுத்தலான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பிலான விடயத்தை இராஜினாமாவுடன் மூழ்கடிக்காது, லொஹான் ரத்வத்தேவிற்கு எதிராக உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு உள்நாட்டு வௌிநாட்டு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு கடந்த 6 ஆம் திகதியும் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கடந்த 12 ஆம் திகதியும் இரவு வேளையில் ஹெலிகொப்டரில் சென்ற இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கைதிகளை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தகவல் வௌியாகியிருந்தது.
இராஜாங்க அமைச்சர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அங்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து, விசேடமாக இரண்டு நபர்களை அழைத்து முழங்காலில் நிறுத்தி தன்னுடைய சுய பாதுகாப்பிற்கு இருந்த ஆயுதத்தை பயன்படுத்தி, அவர்களின் நெற்றியில் குறி வைத்து அச்சுறுத்தியதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டார்.
இதனை உறுதிப்படுத்துவதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தை தொடர்புகொண்டு வினவியபோது, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணையாளர் ஒருவர் அநுராதபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பதிலளிக்கப்பட்டது.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் நடைமுறைக்கு அமைய, இரவு வேளைகளில் உள்ளக விமான போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படுவதில்லை.
அநாவசியமான முறையில் ஆபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உப்புல் தர்மதாஸ கூறினார்.
அதிகார சபையின் உள்ளக விமான சேவைகள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, இரத்மலானை விமான நிலையங்களுக்கு இடையில் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.
அவ்வாறென்றால், இராஜாங்க அமைச்சர் தனியார் விமானத்திலேயே அங்கு சென்றிருக்க வேண்டும்.
விமானப் படையின் விமானங்கள் இரவு வேளையில் பயணங்களை மேற்கொள்ளாது எனவும் தேவை ஏற்பட்டால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மாத்திரம் தற்போது சேவைகள் வழங்கப்படுவதாகவும் விமானப்படை பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
அதிக மதுபோதையில் இருந்த ஒருவரை விமானத்தில் அழைத்துச்செல்ல முடியுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
மதுபோதை தொடர்பில் பரிசோதிக்கப்படாவிட்டாலும் அதிகளவு போதையில் இருக்கின்றமை தெரியவந்தால், அவர்களுக்கு சேவை வழங்கப்பட மாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டது.
எவ்வாறாயினும், குறித்த இராஜாங்க அமைச்சர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு ஹெலிகொப்டரிலில் சென்றதாக தகவல் வௌியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் எதிர்ப்புகள் வலுவடைந்த நிலையில், பதவியை இராஜினாமா செய்வதற்கு பரிந்துரை செய்யுமாறு லொஹான் ரத்வத்தே இன்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கமைய, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் பதிவியிலிருந்து விலகும் லொஹான் ரத்வத்தேவின் தீர்மானத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.
எவ்வாறாயினும், குறித்த அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக அவர் வசமுள்ள இரத்தினக்கல் மற்றும் தங்காபரணம் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பில் இருந்து அவர் விலகியமை தெரியவரவில்லை.
இதற்கமைய, இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கான சிறப்புரிமைகளை அவர் தொடர்ந்தும் அனுபவிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
ட்விட்டரில் இன்று காலை பதிவொன்றை மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் செயற்பட்ட விதத்தை ஒழுக்கமுள்ள சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இராஜாங்க அமைச்சரின் பதவி விலகலை பயன்படுத்தி இந்த சம்பவத்தை மூழ்கடிக்காமல் உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 12 ஆம் திகதி கைதிகள் அச்சுறுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான கூட்டமைப்பின் ட்விட்டர் பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, விசாரணை நடத்தப்பட்டு அவர் மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அனைவருக்கும் எதிராக வழக்கு தொடரப்பட வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
கைதிகளின் பாதுகாப்பை எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ள முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சு பொறுப்பிலுள்ள ஒருவருக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டு முன்னெப்போதும் இந்த நாட்டில் எழுந்ததில்லை என, தமிழ் தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு எதிராக, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடாவடித்தனமாக நடந்துகொள்வதற்கு சட்டத்தில் அறவே இடமில்லை என, கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலுக்கு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என ஐ.நா பிரதிநிதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதிகள், அநுராதபுரம் சிறைச்சாலையின் உட்பகுதியிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவ்வாறாயின் கைதிகளை அமைச்சர் வௌியே அழைத்தாரா எனவும் இது பாரதூரமான குற்றச்சாட்டு எனவும் அம்பிகா சற்குணநாதன் குறிப்பிட்டுள்ளார்.