கொவிட் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கும் சுகாதாரத் துறையினர் ஒவ்வொருவரும் போராளிகளே – ஜனா

கொவிட் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் சுகாதாரத் துறையினர் ஒவ்வொருவரும் போராளிகளே. மக்களைத் தொற்றிலிருந்து பாதுக்காக வேண்டும் என்பதற்காக எத்தனையோ வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா)தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி திட்டத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகலாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி கொவிட் 19 தொற்றானது இலங்கைத் தீவையும் விட்டுவைக்கவில்லை. என்னைப் பொறுத்தமட்டில் விடுதலைப் போராட்டத்தில் இருந்து அரசியலுக்குள் வந்தவன் என்ற ரீதியில் இந்த கொவிட் தொற்றுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் சுகாதாத் துறையினரை நான் விடுதலைப் போராளிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன்.
ஒரு போராட்டத்தில் போராளியொருவர் தாக்குதலுக்குச் செல்லும் போது பல நாட்கள் நித்திரையிழந்து, பட்டினி கிடந்து, தன்னைச் சார்ந்த சமூகத்திற்காக உயிரைக் கூட தியாகம் செய்ய வேண்டும். அந்த வழியிலே சுகாதாத் துறையினர் உண்மையிலேயே தங்களை அர்ப்பணித்து வீடுகளுக்கும் செல்லாமல் வேலை செய்யும் இடங்களிலேயே தங்கி நமது மக்களுக்கான சேவைகள் செய்தவர்கள். அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்த மக்களைத் தொற்றிலிருந்து பாதுக்காக வேண்டும் என்பதற்காக எத்தனையோ வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத் தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களிலே இருந்த பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் மயுரன் உட்பட அவரது உத்தியோகத்தர்கள், போதனா வைத்தியாசலை உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், உள்ளுராட்சி மன்றங்கள், பொலிஸார், இராணுவத்தினர், அரச அதிகாரிகள் போன்றோர் இணைந்து இந்தக் கொவிட் தொற்றுக்கு எதிராகப் போராடியிருக்கின்றார்கள்.

கொவிட் முதலாவது அலையில் மட்டக்களப்பு மாவட்டம் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை. இரண்டாவது அலையிலேயே கூடுதலாகப் பாதிக்கப்பட்டது. இலங்கையில் கொவிட் முதலாவது தடுப்பூசி கடந்த வருடம் இதேநாள் ஏற்றப்பட்டிருந்தாலும் அதற்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக ஊசிகள் ஏற்றப்பட்டத்தில் ஏற்பட்ட காலதாமதம் தான் இரண்டாவது அலையிலே நாங்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டிருந்தோம்.

குறைகள் கூறுவதென்றால் கூறிக்கொண்டே போகலாம். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. ஆனாலும் பல கோமாளித் தனங்களும் கொரோனாவையொட்டி இந்த நாட்டிலே நடந்ததை நாங்கள் அறிவோம். வெத மாத்தையா என்பதும், முட்டியை ஆற்றில் விட்டது போன்ற கோமாளித் தனங்களும் இங்கு நடந்துதான் இருக்கின்றது.

இந்த நாட்டின் அரச இயந்திரம் முதலாவது பகுதி தடுப்பூசி இந்தியாவில் இருந்து வந்ததன் பின்பு இரண்டாம் கட்டத்தை காலம் தாழ்த்தாமல் முன்னமே எடுத்திருந்தால் இரண்டாவது அலையின் தாக்கத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இருந்தாலும் பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்ததன் காரணமாக இன்று ஓரளவிற்கு இந்தத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முடிந்திருக்கின்றது. அந்த வகையிலே அனைத்து தரப்பினரயும் நான் பாராட்டுகின்றேன்.

தற்போது ஒமிக்றோன் பரவலில் மட்டக்களப்பு மாவட்டமும் திகழுவதாகத் தகவல்கள் அறியக் கிடைத்துள்ளன. தற்போது கல்முனையில் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகச் செயற்பட்ட வைத்தியர் சுகுணன் இங்கு பதவியேற்றுள்ளார். அந்த அடிப்படையில் அவரின் தலைமையில் இந்த ஒமிக்குறோன் பரவலையும் சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்கள் பிரதிநிதியாக எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம்.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் இளம் சமுதாயத்தினர் குறிப்பாக வெளிநாட்டு மோகத்துடன் இருப்பவர்கள் இந்த தடுப்பூசி பெறுவதற்குக் கொஞ்சம் தயக்கம் காட்டுகின்றார்கள். குறிப்பாக சினோபாம் பெறுவதற்கே தயங்குகின்றார்கள். இவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறியே ஆக வேண்டும்.

பல நாடுகளுக்கும் நாங்கள் விஜயம் செய்திருக்கின்றோம். குறிப்பிட்ட ஓரிரு நாடுகளைத் தவிர ஏனைய நாடுகள் எந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதைக் கேட்பதில்லை. இரண்டு தடுப்பூசிகளும் இட்ட அட்டை இருக்குமாக இருந்தால் நீங்கள் எந்த நாட்டுக்கும் பிரயாணம் செய்யலாம் என்பதைக் கருத்திற்கொண்டு எமது சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்கு அனைவரும் முன்வந்து இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் இந்தத் தடுப்பூசியொன்று தான் கொவிட் தொற்றில் இருந்து எங்களைக் காப்பாற்றும் என்பதில் உலக நாடுகள் அனைத்தும் உறுதியாக இருக்கின்றது.

இரண்டாவது அலையில் இலங்கையின் சனத்தெகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை விகிதத்தில் இந்தியாவை விட அதிகமானது. ஏனெனில் நாங்கள் அந்த நேரத்தில் தடுப்பூசி இட்டுக் கொண்டது குறைவாக இருந்திருக்கின்றது. தற்போது போதுமான அளவிற்கு தடுப்பூசி இருக்கின்ற காரணத்தினால் அனைவரும் தடுப்பூசி இடவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.