கோட்டா கோ கமயிலிருந்த எஞ்சிய கூடாரங்களும் அகற்றம்!

கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் எஞ்சியிருந்த கூடாரங்கள் மற்றும் நிர்மாணங்கள் என்பன இன்றைய தினம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினர் இணைந்தே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

கொழும்பு, காலிமுகத்திடல் கோட்டா கோ கமயில் இருந்து வெளியேறுவதாக கடந்த 3 மாதங்களாக போராடி வந்த போராட்டக்காரர்கள் கடந்த 10 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த கூடாரங்கள் மற்றும் கொட்டகைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களும் படிப்படியாக அகற்றப்பட்டு வந்தன.

எஞ்சிய சில நிர்மாணங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையிலேயே, இன்று அவை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

அதேநேரம், அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளரான தானிஸ் அலி உள்ளிட்ட நான்கு பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி வரை குறித்த நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.