சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை 4இடம் மாற்றுமாறு கோரியும் சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முல்லைத்தீவு மாவட்டத்தின் 24 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

முல்லைத்தீவு மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற மீனவர்கள், கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்து ஆத்திரமடைந்த மீனவர்கள் தமது படகுகள் வலைகளுக்கு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்த முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் , சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகைதந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் மற்றும் மாத்தளன் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மற்றும் முஸ்லிம் மீனவர்கள் என சுமார் முந்நூறு பேர் முல்லைத்தீவில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை தாக்க குறித்த மீனவர்கள் முற்ப்பட்டபோது காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிபடையினர் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் “அமைதியான முறையில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களான தம்மீது, சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளின் ஆதரவோடு ஈடுபட்டுவரும் மீனவர்கள் இன்று தாக்குதலை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ளார்கள் என ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சட்டவிரோத தொழில்களுக்கு எதிரான மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.