சமவுரிமையை உறுதி செய்யும் வரை சிங்கக் கொடியின் கீழ் நிற்க முடியாது – சபா குகதாஸ்

ஈழத்தமிழர்களுக்கான சமவுரிமையை அரசியலமைப்பு ரீதியாக ஏற்றுக் கொள்ளாத வரை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சிங்கக் கொடியின் கீழ் நிற்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையில் சிங்கக் கொடியுடன் முன்னெடுக்கப்படும் ராஐபக்ச அரசாங்கத்திற்கு எதிரான சிங்கள பொது மக்களின் போராட்டங்களில் வடகிழக்கு தமிழர்கள் பங்குகொள்ள முடியாது. காரணம் இலங்கைத் தீவில் பூர்வீக தேசிய இனமாக வாழும் ஈழத் தமிழர்களுக்கான சமவுரிமையை சிங்கள ஆட்சியாளர்கள் இதுவரை அரசியல் அமைப்பு ரீதியாக ஏற்றுக் கொள்ளாமையாகும்.

சிங்கக் கொடி மீது தமிழர்களுக்கு தனிப்பட்ட வெறுப்புக்கள் இல்லை. அதனைப் பயன்படுத்தும் ஆட்சியாளர்களின் இனவாத மதவாத ஆக்கிரமிப்பும் தமிழர்களின் உரிமைகளை சிங்கக் கொடியின் உதவியுடன் பறிப்பதும் தொடர் கதையாக இருப்பதால் சிங்கக் கொடியின் கீழ் நின்று போராட முடியாது.

இதுவரை தமிழர் மனங்களில் சிங்கக் கொடி என்றால் ஆக்கிரமிப்புக் கொடி என்ற மன எண்ணமே நிறைந்துள்ளது.

நாட்டில் அனைவருக்கும் பொதுவான ஒரு பொருளாதாரப் பிரச்சினைக்கு ஒருமித்து குரல் கொடுப்பது கட்டாயம் என்ற உண்மையை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து மறுப்பதனால் தான் நாடு தொடர் பின்னடைவை சந்திக்கிறது என்ற உண்மையை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதனால் ஒரு கொடியின் கீழ் பல்லினங்களும் ஒன்றிணைய சமவுரிமையை உறுதி செய்வது காலத்தின் கட்டாயம்.

தமிழர்களின் சமவுரிமை சட்டரீதியாக அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்படுமாயின் ஒரு கொடியின் கீழ் ஒன்றிணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல உறுதியாக பயணிக்கலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.