சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு கேடு – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆவேசம்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவது குறித்து கேள்வி எழுப்பிய கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதால் நாட்டிற்கு எதிர்மறையான தாக்கம் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) அடிபணிந்தால் இலங்கை எங்கே போய்நிற்கும்” என நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள், தங்கள் பிரச்சினைகளில் அக்கறையற்ற அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் உணர்திறன் இல்லாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்,” என்று அவர் கூறினார்.

“நகர அபிவிருத்தி அதிகாரசபை (யுடிஏ) அடுக்குமாடி கட்டடங்களைக் கட்டி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் இது தொடர்பாக ஒரு செய்தி வந்தது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நோக்கமானது வெளிநாட்டினருக்கு வீடுகளை நிர்மாணிப்பதா?

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் அக்கறையற்றவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். இவர்களுக்கு வாக்களித்தால் என்னிடம் வீடுகள் கேட்டு வராதீர்கள்,” என்றார். தற்போது சொந்த வீடு இல்லாத பல குடும்பங்கள் உள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.