தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்தார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கமின் 15 ஆண்டு நினைவேந்தல் இன்று ஆகும்.
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக விளங்கியவர்.
காரணம் அன்றைய காலத்தில் உலக நாடுகளில் இருந்த இராஜ தந்திரிகளுடன் துணிவுடனும், தந்திரோபாயத்துடனும், உறுதியாகவும் பேசக் கூடிய ஒருவராக தமிழர்கள் தரப்பில் விளங்கினார்.
அன்ரன் பாலசிங்கம் திறமையை பேச்சுவார்த்தை மேசையில் எதிர்த் தரப்பினரே வியந்து பார்த்த சந்தர்ப்பங்கள் உண்டு. உண்மையாக பாலசிங்கமின் மரணம் இறுதிப் போரில் விடுதலைப் புலிகளின் தோல்வியில் வெளிநாட்டு நகர்வுகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.
அவரின் மரணத்தின் பின்னர் தமிழர் தரப்பில் இன்றுவரை இராஜதந்திர இடைவெளி வறிதாகவே தொடர்கின்றது. ஈடு செய்ய முடியாதா நிலை காணப்படுகின்றது .
தீர்க்கமாக முடிவுகளை பூகோள இராஐதந்திர நகர்வுகளுக்கு ஏற்ப எடுக்கும் வல்லமை கொண்டவராக இலங்கை ஆட்சியாளரின் எந்த சக்திகளுக்கும் விலைபோகாத இனப் பற்றாளனாக தன்னை தியாகம் செய்தவர் தேசத்தின் குரல் .
அந்த வகையில் தமிழர் தேசத்தின் குரலாக ஒலிப்பதற்கு பாலசிங்கத்தின் மரணத்திற்கு பின்னர் தமிழர்கள் தரப்பில் சிறந்த இராஐதந்திரி இல்லை என்ற வேதனையை அவரது நினைவு நாளில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
ஆலை இல்லா ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல இன்று சில சின்னத்தனமா அரசியல்வாதிகள் அன்ரன் பாலசிங்கத்தை ஓப்பீடு செய்து பேசுவதும், இனத்தின் அடிப்படை வரலாறு தெரியாத தரகர்களை இராஜதந்திரிகள் என்று கத்தும் ஊழையும் தான் பெரும் அவலமாக தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.