சிங்கள தேசியவாதம் தொடர்பான ஆருடம்? ஈழநாடு Editorial

சிங்கள பத்திரிகை உலகிலும், புத்திஜீவிகள் உலகிலும் விக்டர் ஐவன்
முக்கியானவர். ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான

அவர், சிங்கள இனவாத புத்திஜீவிகளுக்கு எதிரானவர். ஆட்சியாளர்

களை விமர்சிக்க தயங்காதவர். இவர், அண்மையில் ஆங்கில ஊடமொன்றிற்கு
வழங்கிய நேர்காணலில் – சிங்கள தேசியவாதம் அதன் இறுதி கட்டத்தை
அடைந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். தற்போதைய ஆட்சியாளர்கள்
நெருக்கடிகளை சந்தித்து வரும் பின்னணியை கருத்தில் கொண்டுதான்,
அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார். விக்டர் ஐவனின் கணிப்பு சரியானதா –
சிங்கள தேசியவாதம் அதன் இறுதி கட்டத்தை அடைந்திருப்பது உண்மை
தானா?

சிங்கள தேசியவாத அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கினால் – தமிழர்
விரோதமே, அதன் அடிப்படையாக இருந்திருக்கின்றது. கட்சிக் கொடிகளின்

நிறத்தை தாண்டி, தமிழர் விரோதம் அனைத்து சிங்கள கட்சிகளுக்குள்ளும்,
புரையோடிப் போயிருக்கின்றது. இந்த பின்னணியை அடிப்படையாகக்
கொண்டு, சிந்தித்தால், இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து, சிங்கள
தேசியவாதமென்பது, அடிப்படையில் தமிழர் விரோத தேசியவாதமாகவே

எழுச்சியுற்றிருந்தது. தேசியவாதங்கள் தொடர்பான பொதுவான கணிப்புக்குள்
சிங்கள தேசியவாதம் அடங்காது. அடிப்படையில் – சிங்கள தேசியவாத
மென்பது, தமிழர் விரோத – சிங்கள பௌத்த பெருந் தேசியவாதமாகும்.
‘அப்பே-றட்ட’ என்பதுதான் சிங்கள பெருந்தேசியவாதத்தின் அச்சாணிக்
கருத்தாகும். அதாவது, இந்த நாடு சிங்கள மக்களுக்குரியது- ஏனைய
இனங்கள் இங்கு வாழலாம் ஆனால் தனித்துவமான உரிமைகளை
அனுபவிக்க முடியாது. இதுதான், சிங்கள பெருந்தேசியவாத அசியலின்
இலக்காகும். இந்த அடிப்படையில்தான், இலங்கையின் கடந்த 74 வருடகால
அரசியல் வரலாறானது, இந்த அடிப்படையில்தான் நகர்ந்திருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழலில், சிங்கள தேசியவாதம் அதன் இறுதிக் கட்டத்தை
நோக்கி பயணிப்பதாக கூற முடியுமா?

தமிழ் தேசியவாத அரசியல் எழுச்சியென்பது சிங்கள ஆட்சியாளர்களின்
தவறுகளிலிருந்தே உருவானது. இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கிய
எஸ்.ஜே.வி.செல்வநாயகமும், ஏனைய தலைவர்களும், ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதற்கான கோரிக்கைகளைத்
தான் முன்வைத்திருந்தனர். பண்டா-செல்வா, டட்லி-செல்வா – ஒப்பந்தங்கள்,

ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வதற்கான கோரிக்கைகள்தான். உண்மையில்
அவைகள் சமஷ்டிக் கோரிக்கைகளும் அல்ல. ஆனால் அந்தக்
கோரிக்கைகளைக்கூட சிங்கள ஆட்சியாளர்கள் நிறைவேற்ற முயற்சிக்கவில்லை.
மேற்படி கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட பின்னணியில்தான், தமிழ்த்
தலைமைகள் தனிநாட்டு கோரிக்கையை நோக்கிச் சென்றன. ஆனால்
அப்போதுகூட, தனிநாட்டு கோரிக்கையை அடைவதற்கான எந்தவொரு
வழிமுறையும் தமிழ்த் தலைமைகளிடம் இருந்திருக்கவில்லை. ஆனால்
தமிழ்த் தலைமைகளின் கோரிக்கைகளை புரிந்து கொண்டு ஆரோக்கியமான
அரசியல் இணக்கப்பாடு நோக்கி, சிங்கள ஆளும் வர்க்கம் வரவில்லை. தமிழர்
விரோதத்தை முன்னிறுத்தி தங்களின் அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வது
பற்றியே அவர்கள் சிந்தித்தனர். படித்தவரான பண்டாரநாயக்க தனிச்சிங்கள
சட்டத்தை முன்வைத்தது இந்த பின்னணியில்தான்.

அரசியலுக்கு வருவதற்கு முன்னர், இலங்கைக்கான சமஸ்டி தொடர்பில் பேசிய பண்டாரநாயக்க,இறுதியில் ஒரு சிறு நிலத் துண்டைக் கூட தமிழர்களுக்கு வழங்கக்கூடா
தென்னும் சிங்கள பெருந்தேசியவாத மனோநிலைக்கு அத்திபாரமிட்டார்.
சிங்கள ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரையில் தமிழர் விரோதம் இல்லாத
அரசியலை அவர்களால் இதுவரையில் நிரூபிக்க முடியவில்லை. இந்த
நிலையில், புதிதாக அரசியலுக்கு வருபவர்கள்கூட, விரும்பியோ – விரும்
பாமலோ தமிழர் விரோதத்தை கையிலெடுக்கின்றனர். யுத்த வெற்றியை
தேர்தல் மேடைகளில் உச்சரிக்கின்றனர். இந்த நிலையில், தற்போதைய
ஆட்சியாளர்கள் நெருக்கடியிலிருந்தாலும் கூட, சிங்கள பெருந்தேசியவாதம்
வீழ்ச்சியடைந்து விடுமென்று கருத முடியாது. இந்த ஆட்சியாளர்கள்
வீழ்சியடைந்தாலும் கூட, சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம் புதிய வடி
வங்களில் தன்னை நிறுவிக் கொள்ளும். ஏனெனில் சிங்கள பெருந் தேசிய
வாதம் என்பது, அடிப்படையில், சிங்கள பௌத்தத்தோடு பின்னிப் பிணைந்தது.
சிங்கள பெருந்தேசியவாதம் நெருக்கடிகளை சந்திக்கும் போதெல்லாம், சிங்கள
பௌத்தம் அதனை தாங்கிப்பிடிக்கும். அதற்கான புதிய உக்திகளை
கைக்கொள்ளும்.