வடக்கு – கிழக்கின் தமிழர் பகுதிகளில் சீன (China) அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமான திட்டமாக பார்க்கவில்லை என ரெலோ அமைப்பின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சபா குகாதாஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்றையதினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அண்மையில் சீன தூதுவரை சுமந்திரன் மற்றும் சாணக்கியன் சென்று சந்தித்திருந்தார்கள். அவர்களது சந்திப்பு தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஆபத்தான சந்திப்பாக பார்க்கும் நிலையில் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏனெனில், தற்போது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மட்டும் வழங்கப்படுகின்ற நிலையில் ஜனாதிபதியை தீர்மானிப்பதில் வல்லரசுகளின் ஆதிக்கங்களே அதிகமாக காணப்படுகின்றன.
கடந்த தேர்தல்களிலும் வல்லரசுகளின் ஆதிக்கம் இலங்கையில் பிரயோகிக்கப்பட்ட நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீன தூதுவரை சந்தித்தது தற்போதைய சூழ்நிலையில் ஏற்புடையதல்ல.
வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் சீன அரசாங்கத்தினால் பொருத்து வீட்டு திட்டம் மற்றும் கடற்தொழிலாளர்களுக்கு அரிசி என்பன வழங்கப்பட்டது. குறித்த திட்டங்களை மக்கள் தமக்கான ஆரோக்கியமான திட்டங்களாகப் பார்க்கவில்லை.
ஆகவே, மக்களின் விருப்பங்களை அறியாதும் எமது கலாசாரங்களை பின்பற்றாத வீட்டு திட்டங்களை வழங்கும் சீன அரசாங்கம் மக்களை கருத்தில் கொள்ளாது தமது பூலோக அரசியலை தக்க வைத்துக்கொள்வதற்காக செய்யும் வேலை திட்டமாகவே பார்க்க முடிகிறது” என கூறியுள்ளார்.