இந்தியப் பெருங்கடல் பகுதியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீன செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வந்திருப்பது, அண்டை நாடான இந்தியாவில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்த கப்பலால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் தருவதை இந்திய வெளியுறவுத்துறை தவிர்க்கிறது. அதே சமயம், சீன கப்பலின் தன்மையைக் கருத்தில் கொண்டு அதை ஒருவித சந்தேக பார்வையுடனேயே இந்திய உளவு அமைப்புகள் கவனித்து வருகின்றன.
இந்த சீன கப்பல் பற்றி சமீப வாரங்களில் மிக அதிகமாகவே சர்வதேச ஊடகங்களும், இந்திய, இலங்கை ஊடகங்களும் செய்திகளையும் தகவல்களையும் வெளியிட்டுள்ளன. உண்மையில் அந்த கப்பலில் எத்தகைய வசதிகள் உள்ளன என்பதும், அதன் அறிவியல், தொழில்நுட்ப திறன்களும் முழுமையாக அறியப்படவில்லை.
சீன கப்பலுக்கு நிகரான வசதிகளை கொண்ட கப்பல் இந்தியாவிலும் உள்ளதா என்று பலரும் சமூக ஊடகங்களில் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு விடை பகுதியளவில் ‘ஆமாம்’ என்பதே. ஆனால், அந்த கப்பல் பற்றிய தகவல்கள் பொதுவெளியில் அதிகமாக இல்லை.
சீனாவில் ‘செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் கப்பல்’ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ‘யுவான்வாங்-5’ கப்பல், செயற்கைக்கோள்களை கண்காணிக்கும் திறனையும் ஏவுகணையை ஏவும் வசதியையும் கொண்டுள்ளது.
சீனாவின் ‘யுவான் வாங்’ கப்பல் இலங்கைக்கு வந்தது
சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா?
அதுபோல, இந்தியாவில் கடந்த ஆண்டு கடற்படை சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கப்பலின் பெயர் துருவ். இது கடல் பகுதியில் இருந்தபடி இந்தியாவை நோக்கி வரும் ஏவுகணைகளை முன்கூட்டியே கண்காணித்து போர் கப்பல்களை எச்சரிக்கும் திறன் கொண்டுள்ளது.
மேலும், இந்திய வான்பரப்பில் உள்ள செயற்கைக்கோள்கள், இந்தியாவை நோக்கி நடக்கும் வான் கண்காணிப்புகளை கண்டறிந்து இந்திய விண்வெளித்துறையையும் பாதுகாப்பு ஆராய்ச்சித்துறையையும் எச்சரிக்கும் வகையில் துருவ் தயாரிக்கப்பட்டுள்ளது.
பல வடிவங்களில் யுவான்வாங் கப்பல்கள்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள யுவான் வாங் – 5 கண்காணிப்புக் கப்பல்
யுவான்வாங் என்ற சொல்லுக்கு சீன மொழியில் “நீண்ட பார்வை” அல்லது “தூர நம்பிக்கை” என்று பொருள் கூறப்படுகிறது. யுவான்வாங் என்பதற்கு நீடித்த ஆசை என்ற பொருளும் இருக்கிறது. சீன அரசாங்கம், கடல்சார் வான்பரப்பை கண்காணிக்கும் கப்பல்களுக்கு யுவான் வாங் என்று பெயர் சூட்டியிருக்கிறது. அந்த வகையில் யுவான் வாங் ரகத்தில் நான்கு கப்பல்களை சீனா வைத்துள்ளது. ஒவ்வொரு கப்பலிலும் வெவ்வேறு டிஷ்களுடன் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆன்டனாக்கள், ராடார் மற்றும் ஸ்கேனர் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. யுவான்வாங் 3, யுவான்வாங் 5, யுவான்வாங் 6, யுவான்வாங் 7 என அந்த கப்பல்கள் குறிப்பிடப்படுகின்றன.
உலக அளவில், சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் மட்டுமே இதுபோன்ற செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் விண்வெளி ஆய்வுக்கப்பல்கள் உள்ளன. அமெரிக்காவிடம் இதுபோல 23 கப்பல்கள் உள்ளன.
சீனா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ஷென்சோ விண்வெளி திட்டத்தின் அங்கமாக அதன் விண்வெளி வீரர்களுக்கு உதவியாக யுவான்வாங் கப்பல்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்புவதற்காக வடிவமைத்துள்ளதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. அந்த வகையில், 1977ம் ஆண்டிலேயே இந்த ரக கப்பல்கள் தயாரிக்கப்பட்டாலும், அவை தமது சொந்த கடல் பரப்பைத் தாண்டி பிற கடல் பிராந்தியங்களில் இருந்து கொண்டு சர்வதேச செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை கண்காணிக்க 1986க்குப் பிறகு பயன்படுத்தப்பட்டன. அப்போது யுவான்வாங் 1, 2 ரக கப்பல்கள் பயன்பாட்டில் இருந்தன.
1995இல் யுவான்வாங் 3 ரகத்தில் இரண்டு கப்பல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. இதன் பிறகு 1999இல் யுவான்வாங் 4 கப்பல் சீன செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2007இல் யுவான் வாங் ரகத்தில் மேலும் இரண்டு கப்பல்கள் தயாரிக்கப்பட்டன. இந்த வரிசையில் யுவான்வாங் 5 மற்றும் 6 ரக கப்பல்கள் ஷென்சோ திட்டத்துக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு பெருங்கடல்களின் வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அந்த வகையில், யுவான் வாங் கண்காணிப்பு கப்பல்கள் “மூன்று பெருங்கடல்களுக்கு” செயற்கைக்கோள் ஏவுதலுக்கு முந்தைய பரிசோதனை முறையிலான ஆய்வுப் பணிகளுக்கு உதவ அனுப்பப்படுகின்றன.
கடல் எல்லைகளைக் கடக்கும் யுவான்வாங் கப்பல்கள்
பாக, மேற்கு பசிஃபிக் பெருங்கடல், தெற்கு பசிஃபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியாவின் மேற்கு இந்திய பெருங்கடல், தெற்கு அட்லான்டிக் பெருங்கடல் ஆகியவற்றுக்கு இந்த கப்பல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த ரக கப்பல் முதல் முறையாக 1999ஆம் ஆண்டு நம்பரில் பெருங்கடல்களுக்கு செலுத்தப்பட்டன. அப்போது அதன் முதலாவது, இரண்டாவது வரிசைகள் பசிஃபிக் கடலுக்கு அனுப்பப்பட்டன. யுவான்வாங் 4 ரக கப்பல் இந்திய பெருங்கடலுக்கும் ஆஸ்திரேலியாவின் ஃப்ரெமான்டல் துறைமுகத்துக்கும் அனுப்பப்பட்டது. யுவான்வாங் 3 ரக கப்பல், டர்பனுக்கும் பிறகு அங்கிருந்து அட்லான்டிக் கடல் பகுதிகளுக்கும் அந்த கப்பல் செலுத்தப்பட்டது.
இதில் யுவான்வாங் 4 கப்பல், 2007ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது அதன் மீது நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு கப்பல் ஒன்று மோதியது. அதில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு அது பயிற்சிக்கான இலக்கு கப்பலாக மாற்றப்பட்டது. 2010இல் நடந்த சோதனையின்போது ஜியாங்யின் துறைமுக தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது டிஎஃப்21 பாலிஸ்டிக் ஏவுகணை கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணையின் மூலம் இலக்கு கப்பல் தாக்கி அழிக்கப்பட்டது.
முன்னதாக, 2007இல் யுவான்வாங் 5 மற்றும் யுவான்வாங் 6 ரக மூன்றாம் தலைமுறைக்கான கப்பல்களை சீன கப்பல் கட்டுமான தொழில் கழகம் உருவாக்கியது. இதில் யுவான்வாங் 5 ரக கப்பல் செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் தேவைப்பட்டால் ஏவுகணை செலுத்தும் கப்பலாக இயங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டது. யுவான்வாங் 6 ரக கப்பல், இன்டர்நெட் சேவைக்கு பயன்படும் கடலடி கண்ணாடி இழை வடம் அமைப்புப் பணிகளை மேற்பார்வையிடவும் அதன் கசிவுகளை தடுக்கும் திறன்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் இருந்து சுமார் மூன்று லட்சம் பேர் வரை வசிக்கக் கூடிய நகருக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இந்த வரிசையில் யுவான்வாங் 7, யுவான்வாங் 21, 22 ஆகிய கப்பல்கள் உள்ளன. அவை சீன செயற்கைக்கோள் கடல்சார் கண்காணிப்புத்துறையால் நிர்வகிக்கப்படுகின்றன. யுவான்வாங் 21, 22 போன்ற கப்பல்கள், சீனாவின் லாங்மார்ச் ராக்கெட்டுகளை சுமந்து வர பயன்படுத்தப்பட்டாலும், அவற்றின் நடமாட்டம் மற்றும் சேவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
நோக்கம் என்ன?
இதில், சீனாவின் யுவான் வாங்-5 செயற்கைக்கோள் கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் கப்பல்தான் இப்போது, இலங்கையின் சீன நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தற்போது நங்கூரமிட்டுள்ளது. அங்கு அந்த கப்பலுக்கு எரிபொருள் நிரப்பவும் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒரு வார காலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் நீளம் 220 மீட்டர். அகலம் 25.2 மீட்டர். 25 ஆயிரம் டன் பொருட்களை கையாளும் திறன் கொண்ட இந்த கப்பலால் அதிகபட்சமாக மணிக்கு 37 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லமுடியும். பல கப்பல்களில் இடம்பெற்ற வடிவங்களை ஒருசேர தன்னுள் கொண்டதாக இந்தக் கப்பல் இருக்கிறது.
சீனா சமீபத்திய மாதங்களிலோ வாரங்களிலோ ஷென்ஸோ ரக ராக்கெட்டுகளை விண்வெளிக்கு செலுத்தாத நிலையில், இந்த யுவான்வாங் 5 ரக கப்பல் எந்த நோக்கத்துக்காக பெருங்கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளது என்பதை சீனா விளக்கவில்லை. இது அடிப்படையில் ஒரு போர் கப்பல் கிடையாது. ஆனால், போர் கப்பல்களுக்கு மூளையாகவும் தொழில்நுட்ப ஆற்றலை வழங்கக் கூடியதாகவும் திகழ்கிறது.
அந்த நாட்டைப் பொறுத்துவரை, இதுவொரு வழக்கமான பரிசோதனை அளவிலான கடல் வழி பயணம் என்றே ஆரம்பம் முதல் கூறப்படுகிறது.
இந்தியாவின் துருவ் – சிறப்பம்சங்கள் என்ன?
சீனாவிடம் யுவான்வாங் தொடர்களில் பல வகை கப்பல்கள் இருந்தாலும், இந்தியாவில் அதன் பாதுகாப்பு தேவைக்காக செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கும் சாதனங்கள் பொருத்தப்பட்ட ஒரே கப்பலாக ‘ஐஎன்எஸ் துருவ்’ உள்ளது.
இந்த கப்பல் 2021ஆம் ஆண்டு செப்டம்பரில்தான் நாட்டுடைமையாக்கப்பட்டது. இது முழுக்க இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஓ, இந்திய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்டிஆர்ஓ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டியெழுப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல், இந்திய கடற்படை சேவைக்காக இயக்கப்படுகிறது. அங்குதான் இதன் இயங்குதளமும் கட்டுப்பாட்டு மையமும் உள்ளது. இந்த கப்பலை இந்திய கடற்படை, என்டிஆர்ஓ, டிஆர்டிஓ ஆகியவற்றைச் சேர்ந்த கூட்டுக்குழு இயக்கி வருகிறது.
இந்த கப்பலில் டிஆர்டிஓ உருவாக்கிய அதிநவீன ரேடார் (ஏஇஎஸ்ஏ) சாதனங்கள் உள்ளன. இது பல்வேறு அலைவரிசைகளை ஸ்கேன் செய்யவும், இந்தியாவை கண்காணிக்கும் உளவு செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் இந்தியாவின் கடல் பிராந்தியத்தில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகளை கண்காணிக்கவும் உதவுகிறது.
ஐஎன்எஸ் துருவ் என அழைக்கப்படும் இந்த கப்பல், அணு ஆயுத ஏவுகணைகளை நீண்ட தூரத்தில் கண்காணிக்கும் திறன் கொண்டது. இது இந்திய பசிஃபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களை கண்காணித்து கடற்படையை எச்சரிக்கவும் கடல் படுகைகளை வரைபடமாக்கும் திறனையும் துருவ் கொண்டுள்ளது.
சென்சார்கள் நிரம்பிய மூன்று குவிமாட வடிவ ஆன்டெனாக்களின் சிறப்பு கண்காணிப்பு அமைப்புகளைக் கொண்டுள்ள இந்த கப்பலின் எடை 5,000 டன் ஆகும். முதல் முறையாக இந்த கப்பலின் திறன் 2018ஆம் ஆண்டில் விரிவாக சோதிக்கப்பட்டது.
இந்த கப்பலில் இருந்து 14 மெகாவாட் மின் சக்தியை தயாரிக்க முடியும். இது எதிரி ஏவுகணைகளை கண்காணிப்பதுடன், உள்நாட்டில் நடத்தப்படும் ஏவுகணைகளின் வழக்கமான சோதனைகளின் தரவை துல்லியமாக வழங்குவதற்கும் உதவுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் மேக் இன் இந்தியா திட்டத்தின்படி இந்த கப்பல் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை கூறுகிறது. இந்த திட்டத்துக்காக ரூ.725 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், அது பற்றிய அலுவல்பூர்வ தகவல்களை இந்திய அரசு இதுவரை வெளியிடவில்லை.
இத்தகைய வசதிகளுடன் கூடிய கப்பல்கள் அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன.
ஒப்பீட்டளவில் சீனாவின் யுவான்வாங் தொடர் வரிசை கப்பல்களுக்கு இது நிகரில்லை என்றாலும் தற்போது இலங்கை வந்துள்ள யுவான்வாங் 5 ரக கப்பலில் உள்ள அதே நவீன செயற்கைக்கோள், ஏவுகணை கண்காணிப்பு வசதிகளை துருவ் கப்பல் கொண்டுள்ளது. துருவ் ஒரு போர் கப்பல் கிடையாது. அது போர் கப்பல்களுக்கும் இந்திய பாதுகாப்புத்துறைக்கும் உதவும் வகையிலான தொழில்நுட்ப ஆதாரவை மட்டுமே வழங்கும்.
BBC