சுந்தரம் அருமைநாயகம், பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோருக்கு புதிய நியமனங்கள்

சுந்தரம் அருமைநாயகம் மற்றும் பி.எஸ்.எம். சார்ள்ஸ் ஆகியோரின் புதிய நியமனங்களுக்கு பாராளுமன்ற பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொதுச்சேவைகள் ஆணைக்குழு உறுப்பினராக பதவி வகித்த வி. சிவஞானசோதி காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையிலான பாராளுமன்ற பேரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

வௌிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு ஆகியவற்றின் செயலாளராக சுந்தரம் அருமைநாயகம் கடமையாற்றியுள்ளார்.

இதனிடையே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பி.எஸ்.எம். சார்ள்ஸ் நியமிக்கப்படவுள்ளார்.

பி.எஸ்.எம். சார்ள்ஸ் வட மாகாணத்தின் ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

இதனைத் தவிர, சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளராகவும் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமையாற்றியிருந்தார்.

நேற்று முன்தினம் (25) கூடிய தனது இணக்கப்பாட்டை வழங்கியிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.