சுமந்திரன், சாணக்கியன், கப்பல் கருணா, பிள்ளையான், அமலுக்கு கல்முனையிலிருந்து கட்டப்பன் எழுதும் பகிரங்க மடல்!
அன்புள்ள சட்டச் சக்கரவர்த்தி சுமந்திரன், சாணக்கியன் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
கல்முனையான் நான் இங்கு நலமில்லை. வீதியோர வரிசைகளிலேயே எங்கள் காலம் கடக்கிறது. ஆனாலும், உங்களுக்கு உணவு தொடக்கம் அனைத்துமே மானியம் என்பதால் நீங்கள் நலமாகவே இருக்கிறீர்கள் என்பதை நானறிவேன்.
ஆண்டுகள் பல உருண்டோடியும் கல்முனையில் என் சமூகம் படும் நெருக்குவாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எங்கள் பிரதேச செயலகத்தின் 33 ஆண்டுகால வரலாற்றுப் பயணம் இன்னும் தொடர்கிறது.
நாடே ஒருவேளை உணவுக்கு என்ன செய்வதென்று சிந்திக்கும் இந்த நேரத்திலும் கல்முனையில் தமிழருக்கு எதிராக முஸ்லிம் இனவாதிகளால் கேவலமாக சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
நல்லாட்சி காலத்தில், சட்டம்பி என பெயர்பெற்ற நீங்கள் நிழல் அமைச்சராக இருந்தது என் கண்முன்னே நிழலாடுகிறது. அதனால் என் சமூகம் கண்ட நன்மைதான் என்னவென எண்ணிப் பார்க்கிறேன்.
நீங்க கடிதத்தோடு உண்ணாவிரத மேடை வந்ததும் எங்களை கடுப்பாக்கிய காரணத்தால் அதுக்காக பெற்ற வரவேற்பும் பழைய கதையானாலும் அதை அன்று ஏற்காத பலரும் இன்று ஏற்கின்றனர்.
அச்சுப் புத்தகம் ஏற இருந்த கல்முனை பிரதேச செயலக நிர்வாக அலகு இறுதி நேரத்தில் நீங்கள் ஹக்கீமுக்கு வழங்கிய தகவலால் தடுக்கப்பட்டது எங்களுக்கு தெரிந்த இரகசியம்தான். தொப்பியுடன் உங்கள் விசுவாசம் சொல்ல முடியாதளவு உள்ளதை நாங்கள் நன்கு அறிவோம். நீங்கள் மேய்ப்பர் வழி வந்தத்தாலோ தெரியவில்லை எங்களை நன்றாகவே மேய்க்கிறீர்கள்.
கோட்டாவை இலங்கை மக்கள். புறக்கணித்து விட்டார்கள்,கோட்டாவை விமர்சிப்பதாலோ ரணிலை வசை பாடுவதாலோ என் சமூகத்திற்கு நீங்கள் பெற நினைக்கும் நன்மை என்ன? உங்களின் பால்ய நண்பர்கள் கோட்டாவுடனும், ரணிலுடனும் கொண்ட காதல் இன்னும் மாறவில்லை. இருபதுக்கும் உயர்த்தி இருபத்தொன்றுக்கும் உயர்த்துவர். நீங்கள் நாங்கள் சட்டம்பி என கொக்கரிக்கக் கொக்கரிக்க எங்கள் சமூகம் முட்டை போட்டதுதான் மிச்சமானது.
அண்மையில் “கோட்டா கோ” வுக்கு கல்முனைக்கு வந்தபோதும் தொப்பியணிந்து சகனில் மதிய உணவை பகிந்தவேளை கல்முனை தமிழர்களின் எந்த விடயங்களும் நிறைவேறாதென தாங்கள் உத்தரவாதம் வழங்கியதாக காத்து வாக்கிலே என் காதுக்கும் வந்தது. உங்கள் செயலை நீங்கள் கடிதத்துடன் வந்தபோதே கண்ணூடாகக் கண்டுவிட்டோம்.
நீங்கள்தான் அப்படியென்றால் மொழிச் சக்கரவர்த்தி சாணக்கியனும் தன்னை பாராளுமன்றம் அனுப்பிய சமூகம் சோத்துக்கும் கஞ்சிக்கும் மாரடிக்கையில் ஏற்கனவே பஞ்சு மெத்தையில் கிடப்பவர்களுக்கு பிரியாணி போடும் கதையாக தமிழினத்தையே மலினப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தமிழர் உரிமைகளையும், பாரம்பரியங்களையும் காக்கவேண்டுமென பட்டிருப்பு தொகுதியில் இருந்து பாராளுமன்றம் அனுப்பப்பட்ட சாணக்கியன் அங்கே ஜனாசா எரிப்புக்கும் ஹலால் உணவுக்குமாக தனது மும்மொழித் திறமையில் முழக்கமிடுகிறார். அரபு சமூகத்தை காக்கவும் கட்டியெழுப்பவும் பாராளுமன்றத்தில் அவர்களில் பலர் இருக்கையில் நீங்கள் அரச விரோத போக்கை வெளிப்படுத்தி தமிழர்கள் மீது அரச குரோதத்தை தூண்டுகிறீர்கள். ஆனால் அவர்கள் அம்சடக்கிகளாக இருந்து அனைத்தையும் சாதிக்கின்றனர். இதனால் என் இனமும் தேசமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி நீங்கள் உணர்வீர்களா?
நீங்கள் இருவருமாக இணைந்து உங்களுடைய அதீத திறமைகளை உங்கள் சார் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவதை விடவும் நீங்களே அறியாமல் அச்சமூகத்தை படுகுழியிலிட்டு கொழுத்தவற்கொப்பான செயற்பாடுகளையே செய்கிறீர்கள் என்பதை அறிவீர்களா?
சுமந்திரன், சாணக்கியன் நீங்கள் உங்கள் வல்லமையை எனது இனத்திற்கு தேசத்திற்கு ஆதரவாக பயன்படுத்ததாவிட்டாலும் பரவாயில்லை, எதிராக பயன்படுத்த வேண்டாம். எனது இனத்திற்கு யார் துரோகம் செய்கின்றனரோ அவர்களுடன் கைகோர்த்து என் இனத்தை கேவலப்படுத்தாதீர்கள்.
நீங்கள் இருவரும் இற்றைக்கு பிற்பட்ட குறைந்தது 40 வருட வரலாற்றையாவது புரட்டிப்பார்க்க வேண்டும். குறிப்பாக நீங்கள் கைகோர்க்கும் முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்களாலும், ஆயுதம் தரித்த அந்த இன ஊர்காவற்படை என்ற பெயரில் இயங்கிய அரச பயங்கரவாதத்தாலும் எம் இனம் நசுக்கப்பட்ட வரலாறுகளை நீங்கள் படிக்க வேண்டும்.
அம்பாரையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வரலாற்றுப் படுகொலைகள், பூர்விக தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்ட, கபளீகரம் செய்யப்பட்ட, செய்யப்படுகின்ற விதங்களை நீங்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. ஏனெனில், எங்கள் வலிகளுக்கும் உங்களுக்கும் வெகு தூரம். என் இனத்தின் வரலாறும் வடுக்களும் அறியாத நீங்கள் எங்கும் என் இனம் பற்றி பேசும் அருகதை அற்றவர்கள்.
சாணக்கியன் அவர்களே உங்களுக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கும் இடையேயான உறவு உங்கள் பாட்டன் காலத்து உறவு என்பதை நானறிவேன். அம்பாரை மாவட்டத்திற்கு துரோகம் இழைத்த முதல் அரசியல்வாதி உங்கள் பாட்டனார் இராசமாணிக்கம் என்பதை அம்பாரை மாவட்ட தமிழர்கள் இன்னும் மறக்கவில்லை.
காரியப்பருடன் ஒப்பந்தம் செய்து தனித் தமிழ்க் கிராமமான துறைநீலாவணையை பட்டிருப்பு தொகுதியுடன் இணைத்ததன் மூலம் கல்முனையிலும், அம்பாரையிலும் தமிழர் பரம்பலை மட்டுப்படுத்த துணைபோனவர் உங்கள் பாட்டனார். அந்த வழி வந்த உங்களிடம் எவ்வாறு எனது சமூகம் தனக்கு சார்பான சாணக்கியத்தை எதிர்பார்க்க முடியும். ஆனாலும் உங்கள் பாட்டனாரால் பயனடைந்த சமூகம் இன்று உங்களையும் பயன்படுத்துகிறது.
காட்டிக் கொடுத்து, விற்றுப் பிழைத்தவர்கள் பரம்பரையில் வரலாற்றில் மாறுதல்கள் ஏற்படுமா? இனிமேல் கல்முனை விடயத்தில் உங்கள் நாடகம் வேண்டாம். தமிழ் தேசியம் என்கின்ற ஒற்றை வார்த்தையில் எங்களது நியாயமான அபிலாசைகளை சிதைத்து சின்னாபின்னமாக்கியது போதும். நாங்கள் தலை நிமிர வேண்டும். நாங்கள் தொப்பி அணியத் தயாரில்லை. விபூதியும், உரித்திராட்க்ஷமும், சிலுவையும் எங்களுக்கு போதும்.
சுமந்திரன் கட்சி தலைவர் கனவிலும் சாணக்கியன் முதலமைச்சர் கனவிலும் மிதக்கின்றபோது தமிழர் கனவுகள் மெய்படுவதெப்படி என்பதை என் இனம் உணரைகின்றபோது நீங்கள் தமிழர் அரசியலில் இருந்து துடைத்தெறியப்படவீர்கள் என்பது திண்ணம்.
ஒரு காலம் இருந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் துடைப்பத்தின் பெயர் இடப்பட்டாலும் வெற்றி நிச்சயம் என்பார்கள். இது அம்பரைக்கும் பொருந்தியது. ஆனால் இன்று நிலைமை வேறு. தமிழ் தேசிக் கூட்டமைப்புக்கு எதிராக வேட்பாளர் பட்டியலில் துடைப்பம் பெயரிடப்பட்டாலும் அவர் வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களின் விரக்தியின் வெளிப்பாடே கடந்த பொதுத் தேர்தல் முடிவு. கருநாகம் கனவு காணக்கூடாது அது அவருக்கான வாக்கு என அந்த சூழ்நிலையில் ஒரு துன்புத்தடிக்கும் மக்கள் வாக்களிக்க தயாராக இருந்தனர்
இதையே இறுதியாக நடந்த பொதுத் தேர்தல் உணர்த்தியது. கப்பலேறி அம்பாரை வந்த விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா தழிழ் தேசியக் கூட்டமைப்பை விடவும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றார். இது ஒருபோதும் கருணாவுக்கு அம்பாரையில் வழங்கப்பட்ட அங்கீகாரமல்ல என்பதை மீண்டும் கூறுகின்றேன்.கருணா கையிலெடுத்த முஸ்லிம் விரோத பிரச்சாரமும், வடக்கு பிரதேச செயலக விவகாரமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்பால் இருந்த வெறுப்பும் தமிழர்களின் நாளத்தில் உதிரத்தின் ஓட்டத்தை வேகப்படித்தியதால் வந்த விளைவு. இருந்தாலும் துரோகி என்ற நிலையில் இருந்து கருணா மீட்சி பெற அவர்பெற்ற முப்பதாயிரம் வாக்குகளை பயன்படுத்த சந்தர்ப்பம் இருந்தும் அம்பாரையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்து தனது கடமை முடிந்தென வெளியேறிவுடன் அவர் பழைய நிலையிலிருந்தும் கீழே சென்றார்.
கருணாவுக்கு மட்டுமல்ல கல்முனை தமிழர்கள் வரலாற்றில் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான், சதாசிவம் வியாளேந்திரன் போன்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனியான இடமுண்டு.
கறுப்புச்சட்டை காவலர்களுடன் ஒரு காலத்தில் கல்முனையை சுற்றி வலம்வந்தவர்தான் இந்த வியாளேந்திரன். ஆ உ என்றதும் உண்ணாவிரதம், கிளம்பிவிடும் அவர் வடக்கு பிரதேச செயலக உண்ணாவிரத மேடையிலும் பிரசன்னமானதை நாங்கள் மறக்கவில்லை. எல்லாப் பசப்பு வார்த்தைகளும் அந்த கதிரைக்காகத்தான் என கல்முனையானுக்கு கச்சிதமாக உறைக்க வைத்த பெருமைக்குரியவர்.
பிள்ளையான் என்றால் சும்மாவா. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர். பக்கத்து மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ் கிராமம் ஒன்றின் மக்கள் படும்பாடு அவருக்கு தெரியவில்லை. இதில் வருகின்ற தேர்தல்களில் அம்பாறையில் குதிக்க எண்ணம்வேற இருக்காம். பிள்ளையானையும் கூட்டிற்று பிரதேச செயலகப் பக்கம் வந்ததுகள் சில இன்னும் பிதற்றலோடதான் திரியிதுகள் என்று அறியக்குள்ள ஆக்களப் பிடிச்சி நச்செண்டு உமிழத்தான் எண்ணம்.
இப்படி எமது கல்முனை மண்ணை வைத்து, பிரதேச செயலக விவகாரத்தை வைத்து அரசியல் செய்த, செய்கின்ற வடக்கு, கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கையிலுமுள்ள அரசியல் வாதிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது.
ஆனாலும் எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எள்ளளவும் தீரவும் இல்லை ; தீர்க்க முயற்சிக்கப்படவுமில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
என் இனத்திற்கு பயன்படாத உங்கள் அரசியல் எமக்கு வேண்டாம். சொந்தக் காலில் எமது பிரதேசத்தில் என் இனம் தலைநிமிரும். எதிர்வரும் நாட்களில் களத்தில் சந்திப்போம்.