தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் பூரண அங்கீகாரத்துடன் சுமந்திரனின் முடிவுகள் எடுக்கப்படுகிறதா என்ற கேள்வியுள்ளது. அவர் செயற்பட முடியாத நிலையில் உள்ளார். அவரது வயதிற்கும், சேவைக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆனால், முடிவை எடுக்க முடியாத தலைமை அப்படியே தொடர்ந்து நீடித்தால் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். நான் கட்சிக்குள் உள்வாங்கப்பட்ட பின்னர் 2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கூறிய இந்த விடயத்தினை அந்த 12 ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக நான் கூறிக்கொண்டு வருகிறேன். கட்சிக்குள்ளே ஒரு முடிவு எடுக்கும் பொழுது அந்த முடிவு அனைவராலும் சேர்த்தெடுக்கப்பட வேண்டும். தலைவர் ஒரு முடிவு எடுத்தால் கூட கட்சியில் உள்ளவர்கள் மத்தியிலும் கேட்கப்பட வேண்டும். அல்லது மத்திய குழுவோ, பாராளுமன்ற குழுவாக இருந்த கூட அங்கேயும் ஒன்றிணைந்து முடிவெடுக்கப்பட வேண்டும் அந்த முடிவு ஒரு குழுவின் பெரும்பான்மை முடிவாக இருக்க வேண்டும் . இது தொடர்ச்சியாக நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றேன். தன்னிச்சையான முடிவுகள் தான் தமிழரசு கட்சியை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றி நான் பேசவில்லை. கட்சிக்குள் எந்த விடயத்தை எடுத்தாலும் தன்னிச்சையான முடிவினை எடுப்பதை எப்போது நிறுத்துகிறார்களோ அப்பொழுதுதான் தமிழ் அரசு கட்சி நிலைத்து நிற்கும். கட்சிக்கு மாத்திரமல்ல இந்த மண்ணுக்கும், மக்களிற்கும் அதுதான் தேவை.
சிறிதரன் கூறிய கருத்தினை ஏற்றுக் கொள்கின்றேன். பாராளுமன்ற குழுவில் ஒரு முடிவினை எடுக்கும் போது பெரும்பான்மை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற குழுவில் அவ்வாறு முடிவு வரவில்லை. ஆனால் 22வது திருத்தத்தின் போது எடுத்த தீர்மானத்திற்கு மாறாக சுமந்திரன் வாக்களிக்காமல் சென்று விட்டார். ஆனால் இதே சுமந்திரன்டிஒரு கட்டத்திலே கூறியிருந்தார் யாராவது வாக்களிக்காமல் செல்வார்களாக இருந்தால் புறக்கணிப்பவர்களாக இருந்தால் அவர்கள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என. ஆனால் அன்றைய செயற்பாட்டை பார்க்கும்போது அப்படி கூறிய சுமந்திரன் எதிர்த்து வாக்களிக்கவும் இல்லை, ஆதரித்து வாக்களிக்கவுமில்லை. வெளியேறிச் சென்றுவிட்டார். முதுகெலும்பில்லாதவர்போல செயல்பட்டு இருக்கின்றார்.
தமிழ் தேசிய அரசியல்தான் எமக்கு முக்கியமானது. தேசிய அரசியல் அல்ல. அதை எதிர்க்கட்சி தலைவர் செய்து கொள்ளட்டும். எங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமிழ் தேசிய அரசியலை கொண்டு நடத்த வேண்டும். இங்கே அவ்வாறு இல்லை. தேசிய அரசியலில் காட்டும் அக்கறையில் நூறில் ஒரு பங்கை கூட தமிழ் தேசிய அரசியலில் காட்டப்படுவதில்லை. இந்த விடயம் மாற்றம் அடைய வேண்டும். மாற்றம் அடையாவிட்டால்- தமிழரசு கட்சி வீழ்ச்சி பாதைக்கு போய்க்கொண்டிருக்கின்றது, அது இறுதிக்கட்டத்திற்கு சென்றுவிடும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் பூரண அங்கீகாரத்துடன் சுமந்திரனின் முடிவுகள் எடுக்கப்படுகிறதா என்ற கேள்வியுள்ளது. அவர் செயற்பட முடியாத நிலையில் உள்ளார். அவரது வயதிற்கும், சேவைக்கும் நாங்கள் மதிப்பளிக்கிறோம். ஆனால், முடிவை எடுக்க முடியாத தலைமை அப்படியே தொடர்ந்து நீடித்தால் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமைத்துவத்தின் ஆளுமையின்மை என்றுதான் இதை சொல்ல வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கடந்த 13 வருட காலத்தில் பலர் வெளியேறி பல கட்சிகள் உருவாக்கியுள்ளன. நான் வருவதற்கு முன்னரே கஜேந்திரகுமார் வெளியேறி விட்டார். அவர் வெளியேறியதற்கான காரணங்களை நான் மதிக்கிறேன். கட்சித் தலைமை சில விடயங்களை சரியாக கையாண்டிருந்தால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியேறியிருக்க மாட்டார். சுமந்திரன் உள்வாங்கப்பட்ட பின்னர் பல மாற்றங்கள் நடந்தன. அதன் பின் ஒவ்வொருவராக வெளியேறிச் சென்றனர். அவர்கள் விலகிச் செல்லும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. ஒரு கட்சியை 10 கட்சிகளாக மாற்றும் நிலைமையை ஏற்படுத்தியவர் யார் என்பதை நான் வெளிப்படையாக கூற வேண்டும்.
இலங்கை தமிழரசு கட்சி என்பது தனியார் கம்பனியல்ல. மக்களின் கட்சி மக்களின் உரிமை பெற்றெடுப்பதற்காக இந்த வீட்டுக்குள் வந்து ,டைக்காலமாக குந்தியிருக்கின்றோம் தவிர இது எங்களுடைய வீடு என யாரும் மார்தட்ட முடியாது. ஆனால் இங்கே வருபவர்கள் தங்களுடைய சொந்த வீடாக்கி, மற்றவர்களை வெளியே போடுகிறார்கள்.
தமிழ் தேசியம் படிப்படியாக தேய்ந்து கொண்டு செல்கிறது. 2015ஆம் ஆண்டு சுரேஸ் பிரேமச்சந்திரனிற்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கியிருக்க வேண்டும். 2020ஆம் ஆண்டு தமிழ் அரசு கட்சியின் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவர் பெருந்தன்மையாக கட்சியில் இருக்கிறார். கட்சியிலிருந்து விலக்க வேண்டுமென்ற உள்ளக சதியின் காரணமாகவே சுரேஸ் பிரேமச்சந்திரன் விலகிச் சென்றார்.
சுரேஸ் பிரேமச்சந்திரனிற்கு வழங்காத ஆசனம் திருகோணமலையிலுள்ள, சம்பந்தனிற்கு வேண்டியவருக்கு கொடுக்கப்பட்டது. தமிழ் அரசு கட்சியில் யாருக்கும் தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கப்படுவதில்லை. தேர்தலின் போது தேசியப்பட்டியல் நியமன பட்டியல் வழங்கப்பட்டாலும், தேர்தலின் பின்னர் தமக்கு வேண்டியவர்களிற்கே வழங்கப்படுகிறது.
இப்பொழுது நானும் ஒரு சிலரும் தான் கட்சிக்குள் பிழைகளை சுட்டிக்காட்டுகிறோம். எம்மையும் வெளியே அனுப்பபத்தான் முயற்சிக்கிறார்கள்.அவர்கள் எம்மை வெளியே அனுப்ப வேண்டாம். தமிழ் தேசியம் தேய்ந்து, தமிழ் தேசியத்தை பாதுகாக்க முடியாத தலைமை வருமெனில் அன்றைய தினமே விலகிச் சென்று விடுவேன் என்றார்.