ஜனாதிபதி தமிழ் மக்களை ஏமாற்றாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தர வேண்டும்: கோவிந்தன் கருணாகரம்

‘மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை வைத்துவிட்டு எங்களுடன் பேச வாருங்கள் நாங்கள் பூரண ஒத்துழைப்பினை தருகின்றோம்‘‘ என நாடாளுமன்ற உறுப்பினரும், நாயகம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) செயலாளருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசு தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணைய வைத்து பொருளாதாரத்தினை நிலை நிறுவுவதற்காக முயற்சி செய்வதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதி நேற்றைய தினம் (01.05.2023) தமிழ் கட்சிகளுக்கு விடுத்த அழைப்பு தொடர்பில் (02.05.2023) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினை

இது தொடர்பில் மேலும் கூறுகையில், ‘‘நேற்றை மேதின உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கியமான கருத்தினை வெளியிட்டிருந்தார்.

இந்த வருட இறுதிக்குள் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காணுவதற்கு உத்தேசித்துள்ளதாக கூறியிருக்கின்றார்.

இதேபோன்று தான் கடந்த ஆண்டும் சென்ற சுதந்திரதினத்திற்கு முன்னர் தீர்வினை காண வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த ஆண்டுக்குள் தீர்வினை காணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தமிழ் தரப்புகள் இந்த தீர்வு காணும் விடயத்தில் பின்னடிப்பதாகவும் விலகி தூர நிற்பதாகவும் கூறியிருந்தார்.

பேச்சுவார்த்தை

ஆனால் போராட்டம் நடைபெற்ற காலம் தொடக்கம் ஒரு பக்கம் ஆயுதப் போராட்டம் நடைபெற்றாலும் மாறிமாறி வந்த ஆட்சியாளர்களுடன் தமிழ் தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டே வந்தார்கள்.

இலங்கையில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட தன் பின்னர் மகிந்த ராஜபக்சவுடன் 18 சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவராக இன்றைய ஜனாதிபதி பிரதமராகயிருந்தார்.

அப்போது நாடாளுமன்றத்தினை இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் ஒரு சபையாக மாற்றி பல கூட்டங்களை நடத்திய போதும் அது ஏமாற்றப்பட்டதாகவே சென்றுவிட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்

அந்தவகையில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னுடன் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை காணுவதற்கு முன்வர வேண்டும்.

இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைமைக்கு மாறியதற்கு இலங்கையின் இனப்பிரச்சினை தான் காரணம் என்பதை சிங்கள மக்களுக்கும் பேரினவாதிகளுக்கும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூறி அவர்களை தங்களுடன் இணைத்து இந்த இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

அதன் ஊடாக கொண்டு வரப்படும் தீர்வுத் திட்டத்தினை நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் வைத்துவிட்டு தமிழர்தரப்புடன் பேசவேண்டும்.

நாங்கள் என்றும் பேச்சுவார்த்தைக்கு பின்னடிப்பவர்களோ விலகி நிற்பவர்களோ அல்ல என்பதை நாங்கள் உறுதியாக தெரியப்படுத்துவோம்.

அதனைவிடுத்து தற்போதைய பொருளாதார நிலைமையினை சீர்செய்வதற்காக மீண்டும் மீண்டும் தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணைய வைத்து இலங்கையின் பொருளாதாரத்தினை நிலை நிறுத்துவதற்காக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தினை முன்வைத்துவிட்டு எங்களுடன் பேசவாருங்கள்.

நாங்கள் பூரண ஒத்துழைப்பு தருவதுமட்டுமல்லாமல் புலம்பெயர்ந்துள்ள மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை கூட நிலை நிறுத்த உதவிசெய்வார்கள் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றோம்‘‘ என தெரிவித்துள்ளார்.