ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது இந்தோ – பசுபிக் பிராந்திய அமைச்சர்மட்ட மாநாடு நேற்று சனிக்கிழமை (13) சுவீடனின் ஸ்ரொக்ஹோம் நகரில் நடைபெற்றது.
ஐரோப்பிய வெளிவிவகார செயற்பாட்டுப் பிரிவுடன் இணைந்து சுவீடனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தோ – பசுபிக் பிராந்திய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். அதன்படி, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டார்.
அதேவேளை வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதித் தலைவருமான ஜோஸப் பொரெலை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்தை முன்னிறுத்தி இதுவரையான காலமும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டு வந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கொவிட் – 19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதிலும், பொருளாதார நெருக்கடியை உரியவாறு கையாள்வதிலும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட உதவிகளை அமைச்சர் அலி சப்ரி இதன்போது நினைவுகூர்ந்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் இலங்கையின் வலுவான வர்த்தகப் பங்காளியாக திகழும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோன்று ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை பெற்றுக்கொள்வதற்கு மீள விண்ணப்பிக்கும் செயன்முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக ஜோஸப் பொரெல் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பொருளாதார மீட்சி, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகப் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இலங்கையினால் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.