தமிழக முதல்வராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று (07) பதவியேற்றார்.

தமிழக முதல்வராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

சென்னை கிண்டி ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றதாக தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முதல்வருக்கான பதவியேற்பு உறுதி மொழியையும் இரகசிய காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்’ என ஆரம்பித்து தமிழில் பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார்.

தமிழக முதல்வர் பதவியேற்றதை தொடர்ந்து துரைமுருகன் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய ஆட்சிப் பணி, உள்துறை, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைகளுக்குப் பொறுப்பேற்றார்.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான துரைமுருகன் நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

உயர் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல் அமைச்சராக பொன்முடி பதவியேற்றார்.

அனிதா ராதாகிருஷ்ணன் மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்தார்.

கயல்விழி செல்வராஜ் ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர், கொத்தடிமைத் தொழிலாளர் நலன் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுமார் 500 பேரே பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழாவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ப.சிதம்பரம் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பதவியேற்பு விழாவையடுத்து, ஆளுநர், முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் தேநீர் விருந்து அளிக்கப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்வராக பதவியேற்றபின் மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தன் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றுக்கொண்டதுடன், தன் தந்தையும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி ஆசி பெற்றார்.

தமிழக முதல்வருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், ஆதரவாளர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் 5 முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில், கொரோனா நிலைமையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், குடும்ப அட்டைகளைக் கொண்டுள்ள அனைவருக்கும் 2 ஆயிரம் இந்திய ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அத்துடன், தமிழகம் முழுவதும் சாதாரணக் கட்டண நகரப் பஸ்களில், பெண்களுக்கு இலவசப் பயணம் மேற்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், தமிழகம் முழுவதும் இயங்கும் அரசின் சாதாரண கட்டண நகர பஸ்களில் அனைத்து பெண்களும் கட்டணமின்றியும் பஸ்களுக்கான பயண அட்டை இன்றியும் நாளை முதல் பயணிக்க முடியும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின் சிகிச்சைக் கட்டணத்தை மாநில அரசே காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்க ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.

மேலும், பசும்பாலின் விலை ஒரு லிட்டருக்கு 3 ரூபா வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.