தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென தமிழக மக்களவை உறுப்பினர் S.வெங்கடேசன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, உச்சத்தை தொட்டுள்ள பணவீக்கம் காரணமாக தமிழ் மக்கள் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வருகை தந்துள்ளதாக தமிழக மக்களவை உறுப்பினர் S. வெங்கடேசன் கூறியுள்ளார்.
நாளாந்தம் இந்த எண்ணிக்கை அதிகரிப்பதாக செய்திகள் வௌிவருவதாகவும் அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் சொல்லொண்ணா துயரில் ஆழ்ந்துள்ளனர். இந்த சூழலில் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிய அரசு இரண்டு விடயங்களை செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர், அத்தியாவசிய பொருட்களை அங்குள்ள தமிழ் மக்களுக்கு இந்திய தூதரகம் மூலம் வழங்க ஒன்றிய அரசின் அனுமதியை நாடி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், ஒன்றிய அரசு தாமதமின்றி அதற்கு அனுமதி வழங்க வேண்டுமென மக்களவை உறுப்பினர் கோரியுள்ளார்.
அத்துடன், இந்தியாவில் வந்து தஞ்சம் புகும் மக்களுக்கு தங்குமிடம், அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உடனடியாக உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக மக்களவை உறுப்பினர் S. வெங்கடேசனின் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளுக்கான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சர் உடனடியாக மேற்கொள்வார் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.