இலங்கைத்தீவில் சட்டரீதியாக முதல் இறைமையைக் கொண்ட தமிழர்களின் மிகப் பெரும் ஆதாரமாக விளங்கும் தேசவழமைச் சட்டங்களைச் சட்ட அங்கிகாரம் இல்லாது அழிப்பதற்கு பாரிய சட்ட ரீதியான நடவடிக்கையை ஐனாதிபதி கோட்டாபய ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற செயலணி மூலம் மேற் கொள்ளச் சதித் திட்டம் போட்டுள்ளார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித்தலைவரும் (ரெலோ) வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
‘ஒரு நாடு ஒரு சட்டம்’ இலங்கைத் தீவில் சிறிய எண்ணிக்கையில் வாழும் இனங்களுக்குப் பாதகமாக அமையும் என்ற பொதுவான நிலைப்பாடு இருந்தாலும் இதன் பாரிய தாக்கம் வடக்கு கிழக்கைப் பூர்வீக வாழ்விடமாகக் கொண்ட தமிழர்களையே குறி வைத்துள்ளது.
காரணம் ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் இலங்கையின் தலைநகர் வடக்கைத் தளமாகக் கொண்ட சிங்கை மன்னர்களான தமிழர்களாலே நிர்வகிக்கப்பட்டது. அவர்களின் கால சட்டங்களே தேசவழமை சட்டங்கள் என தற்போதும் வடக்கில் முதன்மையானவையாக விளங்குகின்றன.
ஆரம்பத்தில் இலங்கையில் கண்டியை மையமாகக் கொண்ட கண்டியச் சட்டங்களைச் சிங்களவரும் வடக்கு யாழ்ப்பாண ராசதானியை மையமாகக் கொண்ட தமிழர்கள் தேசவழமைச் சட்டங்களையும் கொண்டிருந்த இரு தேசங்கள் இருந்தன. இதன் அடிப்படையில் தான் தமிழர் தேசம் தங்களுக்குரிய நாட்டுச் சட்டங்களை தேசவழமைச் சட்டங்கள் என அழைத்தனர்.
இதுதான் தமிழர்கள் இந்த நாட்டின் இறைமை உள்ள இனம் என்பதற்கு மிகப் பெரும் ஆதாரம் ஆகும். தேசவழமைச் சட்டங்கள் ஒல்லாந்தர் காலத்தில் டச்சுச் சட்டங்களுடன் தனித்துவமாகத் தமிழ் முதலிமாரால் தொகுக்கப்பட்டு வடக்குத் தமிழர்கள் இலங்கையில் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தேசவழமைச் சட்டம் ஏற்புடையது என அங்கிகாரம் வழங்கினர்.
இதனை பிரித்தானியரும் தமது கோல்புறுக் அரசியலமைப்பின் ஊடாக அங்கிகாரம் வழங்கினர் . இலங்கைத் தமிழர்கள் இறைமை உள்ள இனம் என்பதை ஆதாரமாகக் கொண்ட தேசவழமைச் சட்டங்களை இல்லாது ஒழிப்பதே ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பிரதான இலக்கு.
ஞானசார தேரர் யாழ்ப்பாணம் வந்து ஒரு சிலரிடம் குறிப்பாகக் கோட்டா சார்பான கட்சியின் பிரதிநிதிகளுடன் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ தொடர்பாகக் கருத்துக்களை முன்வைக்கும் போது தேசவழமைச் சட்டங்கள் உள்வாங்கப்படும் என்ற வெற்று அறிக்கை ஒன்றைத் தமிழர்களை ஏமாற்றுவதற்காகக் கூறினாரே தவிர உண்மையாக தேசவழமைச் சட்டங்களை நீக்குவதே அவர்களது எண்ணம்.
இவர்களைப் புரிந்த யாரும் மறுக்க மாட்டார்கள். ஜனாதிபதி கோட்டாபயவின் செயலணி ஒரு போதும் கண்டியச் சட்டத்தில் எந்த மாற்றங்களையும் செய்ய மாட்டார்கள். ஆகவே அவர்களது பிரதான நோக்கம் தமிழர்களை இறைமை அற்ற இனமாக மாற்றுகின்ற பாரிய தமிழின அழிப்பாகும்.
தொடர்ச்சியாக 1956 இல் இருந்து 2009 வரை பாரிய தமிழ் இனப் படுகொலைகளைச் செய்த இலங்கை ஆட்சியாளர்கள் தமிழர்களது கலாச்சாரத்தையும் இல்லாதொழித்து பௌத்த மயமாக்கலை இன்று வரை தமது நிகழ்ச்சி நிரலாகத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இறுதியாக எஞ்சிய சட்டரீதியான இறைமைக்குரிய ஆதாரமான தேசவழமைச் சட்டங்களையும் அழித்து இறைமை அற்ற இனமாகத் தமிழர்களை மாற்றி சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தான ஒரு நாடு ஒரு சட்டம் என்ற புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பாரிய சதியில் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.