தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்ராலினுக்கு அனுப்பப்பட்ட கடிதம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கடிதமல்ல என்ற தகவல் தமிழக முதல்வரிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கூட்டமைப்பின் தனித்தனிக்குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, கூட்டமைப்பின் ஏனைய தரப்புக்களுடன் தேவையற்ற முரண்பாட்டை வளர்க்க வேண்டாமென தமிழக முதல்வர், இலங்கை விவகாரங்களை கையாளும் பிரமுகர்களிற்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் தேசியகூட்டமைப்பு என குறிப்பிட்டும், ஐரோப்பாவில் இயங்கும் காகிதத்தலைப்பு அமைப்பான உலகத்தமிழர் பேரவையின் பெயர் குறிப்பிட்டும், கடந்த 18ம் திகதியிட்ட கடிதம் தமிழக முதல்வரிற்கு அனுப்பப்பட்டது.
அது, வெறும் நன்றியறிதல் கடிதமாக தென்பட்டாலும், கூட்டமைப்பிற்குள் தனி அணியாக செயற்படும் உலகத்தமிழர் பேரவை, கனடிய தமிழ் காங்கிரஸ், எம்.ஏ.சுமந்திரன் அணியின் மற்றொரு நகர்வாக கருதப்படுகிறது.
தி.மு.க அமைச்சர் ஒருவர் ஊடாகவே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
தி.மு.கவின் முக்கிய பிரமுகர்கள் பலர் தமிழீழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய அமைப்புக்களுடன் நீண்ட தொடர்பை கொண்டிருந்தவர்கள். வடக்கு கிழக்கிலுள்ள மிதவாத கட்சிகளை விட, போராளி அமைப்புக்களுடனேயே நீண்ட தொடர்பை வைத்திருந்தவர்கள்.
கடித விவகாரம் தமிழக முதல்வரின் ஆலோசகர் வட்டத்திற்கு சென்றதும், அந்த விவகாரத்தை பற்றி பேச, கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியொன்றின் தலைவரை, தமிழக முதல்வரின் ஆலோசகர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
தமிழக முதல்வரின் ஆலோசகர் குறிப்பிடும் வரை, இந்த கடித விவகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி அறிந்திருக்கவில்லை.
நேற்று மாலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து, அந்த கடிதம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ கடிதமல்ல என்பது, தமிழக முதல்வரின் பிரதிநிதிகளிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளினால் தனித்தனியாக தெளிவுபடுத்தப்பட்டதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்தது.
இதையடுத்தே, கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளில் சிக்க வேண்டாமென தனது கட்சி பிரமுகர்கள், ஆலோசகர்களிற்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் தி.மு.க தரப்பிலிருந்து நேற்று தமிழ் கட்சிகளிற்கு தெரிவித்த தகவலில்,
‘தமிழீழ போராளி அமைப்புக்களின் காலங்களில் ஒவ்வொரு தரப்புடனும் தொடர்பு வைத்து, மறு தரப்பை தள்ளிப்போக வைத்த கடந்த கால வரலாற்றின் அடிப்படையில், தமிழக முதல்வர் இப்பொழுது ஆலோசனை வழங்கியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து தரப்பினரையும் தமிழக முதல்வர் விரைவில் சந்திக்கும் வாய்ப்புள்ளது’ என குறிப்பிட்டப்பட்டுள்ளது.