தமிழ் நாடு அரசினால் நடைபெறும் உலக தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் 2025 செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அழைப்பு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் அவர்களின் அழைப்பு.

உலக தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் 2025

இம் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தமிழ் நாடு அரசினால் சென்னையில் நடைபெறும் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்திற்கு பங்குபற்றுவதற்கான அழைப்பிதழை குடியுரிமை பெறாதா தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் அவர்கள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பங்களிப்பைக் கொண்டாடவும், அங்கீகரிக்கவும், பாராட்டவும் மற்றும் அவர்களின் கலாச்சார அடையாளத்தை நிலைநிறுத்தவும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 12 ஆம் திகதி “உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தை” பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களின் ஒத்துழைப்புடன் கொண்டாட முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் முதலாவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் கடந்த 2022 ம் ஆண்டு நடத்தப்பட்டது. அவ்வாறே இம்முறையும் நான்காவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் “எத்திசையும் தமிழணங்கே!” என்ற தொனிப்பொருளில் தமிழ்நாடு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விரு நாட்களிலும் 60 நாடுகள் மற்றும் 17 மாநிலங்களில் இருந்து அதன் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதுடன் மேலும் இவ் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தின 2025 ம் ஆண்டிற்கான கூட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு அரசு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அன்புடன் அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.