தமிழ் பொது வேட்பாளர்- தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து!

தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 12 மணி அளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.

சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமே இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடிய கட்சிகள் தமிழ் மக்களது கோரிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியாகக் குறித்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

மேலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்படும்போது பொது வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள்

இவ் உடன்படிக்கையில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களும் பல்வேறு சிவில் அமைப்புக்களையும் இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச் சபையின் சார்பில் அதன் முக்கியஸ்தர்களும் கையொப்பம் வைத்துள்ளதோடு 7 தமிழ்க் கட்சிகளும் 7 சிவில் சமூக பிரதிநிதிகளும் கையொப்பம் இட்டுள்ளனர்.

இதில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஐனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய ஏழு கட்சிகளும் அங்கம் பெற்றுள்ளன.

குறித்த உடன்படிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தான் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், சட்டத்தரணி ந.ஶ்ரீகாந்தா, ஜனநாயக போராளிகள் சார்பில் சி.வேந்தன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி அ.யோதிலிங்கம், அரசியல் விமர்சகர் யதீந்திரா மற்றும் அரசியல் விமர்சகர் நிலாந்தன் உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கையொப்பம் இட்டனர்.