தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை

13 ஆம் திருத்தம், 16 ஆம் திருத்தம், தோட்ட வீடமைப்பு, தொழிலாளர் சம்பளம், சீனா ஆகிய விவகாரங்கள் பற்றி தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு, இந்திய தூதுவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், பொது செயலாளர்சந்திரா சாப்டர் ஆகியோர் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதுவர் வினோத் ஜேகப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் உள்ளிட்ட இந்திய தரப்பை இன்று இந்தியா இல்லத்தில் சந்தித்தனர்.

இது தொடர்பில் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தைகள்தான் 13ம் திருத்தம், 16ம் திருத்தம் என்பவை ஆகும். இன்று இந்த இரண்டையும் இலங்கை அரசு கைவிட்டு விட்டது. 13ம் திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை தேர்தல்களை இலங்கை அரசு ஒத்தி வைத்து விட்டது. அதேவேளை மாகாணசபைகளுக்கு உரிய பாடசாலைகளையும், வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உள்ளே சட்ட விரோதமாக சுவீகரித்து கொண்டுள்ளது.

16ம் திருத்தம் மூலமாகத்தான் தமிழ் மொழிக்கு நிர்வாக மொழி, கல்வி மொழி, மக்கள் சபை மொழி, சட்டவாக்க மொழி, நீதிமன்ற மொழி என்ற சட்ட அந்தஸ்துகள் கிடைத்தன. இவற்றுக்கும் இந்தியாத்தான் காரணமாக அமைந்தது.

ஆகவே 13ஐ பற்றி பேசும் போது, இந்திய அரசு 16 பற்றும் இலங்கை அரசுடன் பேச வேண்டும். ஏனெனில் அதிகார பரவலாக்களை மட்டுமல்ல, இன்று மொழி உரிமையையும் இந்த அரசு பறித்துக்கொண்டு கொண்டு வருகிறது. நான் அமைச்சராக இருந்த போது ஆரம்பித்த இரண்டாம் மொழி பயிற்றுனரகளுக்கு பயிற்சி அளித்து உருவாக்கும் திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி விட்டது.

அதேபோல் இந்திய பிரதமர் எமது அழைப்பை ஏற்று மலையகம் வந்து வழங்கிய பத்தாயிரம் வீட்டு திட்டமும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை அரசு இதை தாமதம் செய்கிறது. இதுவும் இந்திய அரசுக்கும், புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் நமது ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

ஆகவே இலங்கை அரசு, இந்திய அரசுடன் உடன்பட்ட இந்த திட்டங்களை வலியுறுத்த இந்த அரசுக்கு முழுமையான உரிமைகள் உள்ளன. இதை இந்தியா செய்ய வேண்டும்.

அதேபோல் தோட்ட தொழிலாளர்களின் நாட்சமபலம் இழுபறியில் இருக்கிறது. அரசு முழு முழுக்க தொழிலாளர்களை கம்பனிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டு அமைதி காக்கிறது. இதுவே ஏனைய துறை சார்ந்த பெரும்பான்மை இனத்தை சார்ந்த தொழிலாளர்கள் என்றால் அரசு அக்கறை காட்டாமல் இருக்குமா? நாட் சம்பளம் ஆயிரம் ரூபா என கூறிவிட்டு, வேலை செய்யும் நாட்களை தந்திரமாக கம்பனிகள் குறைத்து விட்டன. இதை அரசு கண்டு கொள்வது இல்லை. அப்படியானால், இந்த மக்கள் வேறு நட்டு பிரஜைகளா என கேட்கிறோம்? இந்த இந்திய வம்சாவளி தொழிலாள மக்கள் தொடர்பில் இந்திய அரசு கட்டாயமாக குரல் எழுப்ப வேண்டும்.

இந்த பிரச்சினைகள் தொடர்பான மேலதிக பேச்சுகளை நடத்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, பாரதம் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியிரை சந்திக்க விரும்புகிறது, இவற்றுக்கு கொரோனா நிலைமை சீரானதுடன் ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.

சீனா இலங்கையில் வந்து நிலை கொண்டிருப்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பது மட்டுமல்ல. சீனா இலங்கையின் பல்மொழி, பன்மத, பல்லின அடிப்படையை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக நாம் சந்தேகம் கொள்கிறோம். ஆகவே தமிழர்களை சீனா இலங்கையர்களாக ஏற்க மறுக்கின்றதா என நாம் கேட்கிறோம். ஆகவேதான், இலங்கையில் சீனா நிலைப்பெறலை தமிழர் நாம் சந்தகமாக பார்க்கிறோம் என்பதையும் இந்தியா புரிந்துக்கொள்ள வேண்டும்.