தமிழ்த் தலைமைகளின் பலவீனமே வெளித் தீர்மானங்களுக்கு காரணம்-ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ்த் தேசியம் சார்பு தலைமைகளின் ஒற்றுமை இன்மை காரணமாகவே தாயகத்துக்கு வெளியே தமிழரை மையப்படுத்திய தீர்மானங்கள் வெளிவருகின்றன. இது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. வருகின்ற தீர்மானங்கள் தொடர்பாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் சம்பந்தன், கஐேந்திரகுமார், விக்கினேஸ்வரன் பேன்றவர்களே. இதுதான் தற்போதைய யதார்த்தம் என வடக்குமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தரப்பில் அரசியல் தலைமைகள் பலமாக ஒரு நிலைப்பாட்டில் இல்லை என்ற உண்மையை தாயகத்திற்கு வெளியே வருகின்ற தீர்மானங்கள் வெளிப்படுத்துகின்றன என்ற கசப்பான உண்மையை கூறித்தான் ஆகவேண்டும்.

திம்பு பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பில் பல கட்சிகள் இயக்கங்களாக இருந்தாலும் தீர்மானத்தை ஒரே முடிவாக எடுத்தமையால் சிங்கள அரசாங்கத்தால் ஏமாற்ற முடியாது பின்வாங்க வேண்டிய நிலை உருவானது இது வரலாற்று உதாரணம். தற்போதைய சூழ்நிலையிலும் இவ்வாறான நிலை தமிழர் தரப்புக்கு அவசியமானது இதனை தமிழ்த் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்மையில் ரெலோ இயக்கம் இதனை மையமாகக் கொண்டுதான் ஒரு பொதுத் தளத்தில் அனைத்து தமிழ்க் கட்சிகளையும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச வருமாறு அழைப்பு விடுத்தது இதனை அகில இலங்கை தமிழ் காங்கிரசை தவிர ஏனைய தரப்புக்கள் உத்தியோக பூர்வ கலந்துரையாடல்களை மேற் கொண்டுள்ளனர் ஆனால் இனத்தின் விடுதலைக்காக கஐேந்திர குமார் அணி பொதுத் தளத்திற்கு வரவேண்டும்.

விடுதலைப்புலிகள் பலமாக இருந்த போது வெளித் தீர்மானங்களுக்கு மாறாக புலிகளின் கோரிக்கையை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகளே முதன்மைப் படுத்தப்பட்டன. ஆனால் புலிகளின் ஆயுதபலத்தை விரும்பாத சக்திகள் மறைமுக நிகழ்ச்சி நிரலில் புலிகளை அழிக்க உதவினர்.

ஆனால் தற்போதைய சூழலில் தமிழ்த் தலைமைகள் ஐனநாயக பலத்தை திரட்டுவதன் மூலமே மீண்டும் அதிகார சக்திகளை தமிழர் விடையத்தில் திரும்பிப் பார்க்க வைக்க முடியும். அதற்கு முன்னோடியாக அனைவரும் பொதுத் தளத்திற்கு வந்து ஈழத் தமிழர்கள் சார்ந்த பொது நிலைப்பாட்டை தீர்மானமாக எடுத்து அதிகார சக்திகளுக்கு வழங்கி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் இதுவே காலத்தின் கட்டாயம்.

தமிழ்த் தலைமைகள் விமர்சனங்களையும் ஏற்றத் தாழ்வுகளையும் விட்டு ஒரு பொதுத் தளத்தில் கலந்துரையாட முன் வரவேண்டும் இதனை தவிர்த்தால் வெளிச் சக்திகள் தங்களது நலன்களை மையமாகக் கொண்டு பல்வேறு தீர்மானங்களை கொண்டு வருவதை தடுக்க யாராலும் முடியாது .