அரசாங்கத்திற்கு எதிராகவும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (07) தலவாக்கலை நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மலையகத்தில் பல பாகங்களிலும் இருந்து வந்து மக்கள் கலந்து கொண்டனர்.
எதிர்ப்பு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக தலவாக்கலை நகருக்கு பூண்டுலோயா வழியாகவும் நுவரலியா வழியாகவும் ஹட்டன் வழியாகவும் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் தங்களுடைய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வண்ணம் தலவாக்கலை நகரை வந்தடைந்தனர்.
அங்கு பிரதான சுற்று வட்டத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வேலுசாமி இராதாகிருஷ்ணன், பழனி திகாம்பரம் மயில்வாகனம் உதயகுமார், வேலுகுமார் ஆகியோர் கூட்டம் நடைபெற்ற பிரதான விளையாட்டு மைதானத்தை நோக்கி ஊர்வலமாக சென்றடைந்தனர்.
தொடர்ந்து பிரதான மேடைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச பிரதான மேடையை வந்தடைந்ததும் கூட்டம் ஆரம்பமாகியது. அவர் அங்கு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்த பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், கூட்டணியின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.