திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று திபெத்திய அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தெ பெடரல் செய்தித்தளம் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.
கடந்த மாதம் பீகாரின் புத்தகாயாவில் நடைபெற்ற பௌத்த துறவிகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை தூதுக்குழுவினரால் தலாய் லாமாவை கொழும்புக்கு வருமாறு வலியுறுத்தப்பட்டதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
திபெத்தின் புனிதரை இலங்கை தூதுக்குழுவினர் அழைத்தனர், எனினும் அவர் தற்போது இலங்கைக்கு பயணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஆட்சேபனையை அடுத்து தலாய் லாமா இலங்கை செல்வது நல்லதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள திபெத்தின் அதிகாரி, இந்த கேள்வியை இலங்கை மக்களிடமே கேட்க வேண்டும் என்று பதிலளித்தார்.
தலாய் லாமா 1959இல் தனது தாயகத்தை விட்டு வெளியேறியதிலிருந்து இந்தியாவில் வசித்து வருகிறார். இந்தியாவில் சுமார் ஒரு இலட்சம் திபெத்திய நாடுகடத்தப்பட்டவர்களும் வசித்து வருகின்றனர்.
அவர் இந்தியாவில் உள்ள தர்மசாலாவை தளமாகக் கொண்ட நாடுகடத்தப்பட்ட அரசாங்கத்தின் தலைவர் பதவியில் இருந்தாலும், அவரை ‘பிரிவினைவாதி’ என்று சீனா அழைக்கிறது. அத்துடன் அவரை ஆதரிக்கும் நாடுகளை எதிர்க்கிறது.