வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோஷத்தை வலியுறுத்தி வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டமானது திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவின் 50 வது நாளை குறிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டமானது முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக ஒன்று கூடிய பொதுமக்கள் கையில் பாதாதைகள், பலூன்கள் மற்றும் பட்டங்களை ஏந்தியவாறு பேரணியாக சென்று குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்த சூழ்நிலைக்கு பின்னரான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும், காணிப் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு கிடைக்க பெற வேண்டும், கருத்து சுதந்திரம் வழங்கப்பட வேண்டும், ஒன்று கூடுவதற்கான அனுமதி மறுக்கப்படக்கூடாது, பயங்கரவாத தடைச் சட்ட திட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மத சுதந்திரம் சிறுபான்மையினருக்கு கேள்விக்குறியாக காணப்படுகிறது, எனும் கோரிக்கைள் பொறிக்கப்பட்ட பலூன்கள் மற்றும் பட்டங்கள் பறக்க விடப்பட்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.